தாயை கொலை செய்து உடலை கூறுபோட்ட மகள்

மும்பையில் தாயை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீட்டில் வைத்திருந்த மகளை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையில் தாயை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீட்டில் வைத்திருந்த மகளை போலீசார் கைது செய்தனர்.
அழுகிய நிலையில் உடல்
மும்பையில் உள்ள லால்பாக் இப்ராகிம் கசம் சால் பகுதியை சேர்ந்தவர் வீனா (வயது53). இவரது மகள் ரிபுல் ஜெயின் (23). சம்பவத்தன்று வீனாவின் வீட்டுக்கு உறவினர் சென்றார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. அதே நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது.
சந்தேகமடைந்த உறவினர் சம்பவம் குறித்து காலாசவுக்கி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று வீட்டை திறந்து பார்த்தனர். வீட்டுக்குள் ரிபுல் ஜெயின் மவுனமாக இருந்தார். வீனாவை காணவில்லை. வீட்டின் பீரோவில் மனித உடல் அழுகிய நிலையில் இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் ரிபுல் ஜெயினை பிடித்து விசாரித்தனர். இதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
தாயை கொலை செய்த மகள்
வீனாவுக்கும், மகள் ரிபுல் ஜெயினுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தாய் மீது மகளுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ரிபுல் ஜெயின், தாய் வீனாவை கொலை செய்து உள்ளார். பின்னர் அவர் மார்பிள் கட்டர், கத்தியை பயன்படுத்தி தாய் உடலை துண்டு, துண்டுடாக வெட்டி கூறுபோட்டது தெரியவந்தது.
போலீசார் வீட்டின் பீரோ, பாத்திரம், தண்ணீர் தொட்டியில் இருந்து வீனாவின் உடல் பாகங்களை மீட்டனர். மேலும் உடல் பாக மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தாயை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டிய மகளை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீனாவை 2, 3 மாதங்களாக பார்க்கவில்லை என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். எனவே வீனா எப்போது, எப்படி கொலை செய்யப்பட்டார்?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் நடந்தது போன்ற கொலை
சமீபத்தில் டெல்லியில் அப்தாப் அமீன் என்ற வாலிபர் தனது காதலியான மும்பையை அடுத்த வாசய் பகுதியை சேர்ந்த ஷரத்தாவை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்து, பின்னர் உடல் பாகங்களை சிறிது சிறிதாக வெளியில் எடுத்து சென்று காட்டில் வீசினார். அதே பாணியில் இந்த கொலையும் நடந்து உள்ளதால், ஷரத்தா கொலை பாணியை அறிந்து அதேபோல தாய் வீனாவை ரிபுல் ஜெயின் கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
பெற்ற மகளே தாயை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டிய நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






