பா.ஜனதாவுடன் தேசியவாத காங்கிரஸ் எப்போதும் இணையாது; சரத்பவார் திட்டவட்டம்


பா.ஜனதாவுடன் தேசியவாத காங்கிரஸ் எப்போதும் இணையாது; சரத்பவார் திட்டவட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2023 12:45 AM IST (Updated: 14 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தேசியவாத காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவுடன் எப்போதும் இணையாது என அக்கட்சியின் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவுடன் எப்போதும் இணையாது என அக்கட்சியின் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ரகசிய தகவல்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இணைந்தனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். ஆனால் கட்சியின் தேசிய தலைவரான சரத்பவார் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்தது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், துணை முதல்-மந்திரியுமான அஜித்பவாரும் புனேயில் ஒரு தொழிலதிபர் வீட்டில் நேற்று முன்தினம் ரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

திறப்பு விழா

இந்தநிலையில் நேற்று சோலாப்பூர் மாவட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ. கணபத்ராவ் தேஷ்முக்கின் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கலந்து கொண்டார். அப்போது சரத்பவார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நலம்விரும்பிகள் முயற்சி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற முறையில், எனது கட்சி பா.ஜனதாவுடன் எப்போதும் கூட்டணியில் இணையாது என்பதை நான் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். பா.ஜனதா கட்சியுடனான எந்த ஒரு தொடர்பும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அரசியல் கொள்கைக்கு பொருந்தாது. சில நலம்விரும்பிகள் இந்த கூட்டணியில் என்னை உடன்பட வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பா.ஜனதாவுடன் நான் ஒருபோதும் இணையமாட்டேன். எங்களில் சிலர்(அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு) மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எனவே எனது நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்படுத்த முடியுமா என்று அவர்கள் முயற்சித்து பார்க்கின்றனர். அதனால் தான் எங்களுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவாரை சந்தித்ததில்...

மேலும் புனேயில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் துணை முதல்-மந்திரி அஜித்பவாருடன் ரகசிய சந்திப்பு நடந்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், "அஜித்பவார் எனது உறவினர் என்பதை நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் மருமகனை சந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது?. ஒரு குடும்பத்தில் மூத்த நபர் மற்றொரு குடும்ப உறுப்பினரை சந்திக்க விரும்பினால், அதில் எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாது" என்றார்.

1 More update

Next Story