தாதர் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் ரெயில் சேவை பாதிப்பு- பயணிகள் அவதி


தாதர் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் ரெயில் சேவை பாதிப்பு- பயணிகள் அவதி
x
தினத்தந்தி 23 Sep 2022 3:15 AM GMT (Updated: 23 Sep 2022 3:15 AM GMT)

தாதர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மும்பை,

தாதர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சிக்னல் கோளாறு

மும்பையின் உயிர்நாடியாக மின்சார ரெயில் போக்குவரத்து விளங்குகிறது. இந்தநிலையில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள தாதர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 6 மணி அளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாதரில் இருந்து செல்லும் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வழித்தடத்தில் வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இது பற்றி அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஊழியர்கள் மூலம் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக சில மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக மத்திய ரெயில்வே அறிவித்தது.

தாமதமாக இயக்கம்

ரெயில்சேவை பாதிப்பு காரணமாக காலை வேளையில் அலுவலகம் செல்வோர் நடுவழியில் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர். மேலும் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் பிளாட்பாரத்தில் குவிந்ததால் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது.

இதையடுத்து கோளாறு காலை 8.30 மணி அளவில் சரி செய்யப்பட்டது. இதன்பின்னர் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்ன. மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து தானே, கசாரா, கர்ஜத் நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் ½ மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதாக மத்திய ரெயில்வே செய்தி தொடர்பாளர் சிவாஜி சுத்தார் தெரிவித்து உள்ளார்.


Next Story