விளம்பரத்தை பார்த்து பணத்தை இழந்த கூலி தொழிலாளிக்கு பேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு - ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது


விளம்பரத்தை பார்த்து பணத்தை இழந்த கூலி தொழிலாளிக்கு பேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு - ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது
x

விளம்பரத்தை பார்த்து பணத்தை இழந்த கூலி தொழிலாளிக்கு பேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பாய உத்தரவை ஐகோர்ட்டு தடை விதித்தது.

மும்பை,

விளம்பரத்தை பார்த்து பணத்தை இழந்த கூலி தொழிலாளிக்கு பேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பாய உத்தரவை ஐகோர்ட்டு தடை விதித்தது.

மனு தாக்கல்

தினக்கூலி தொழிலாளியான திரிபுவன் போங்கடே என்பவர் நுகர்வோர் தீர்ப்பாயத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பேஸ்புக் வலைதளத்தில் மரியா ஸ்டூடியோ என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தை பார்க்க நேரிட்டது. இதில் "நைக்" காலணிகள் ரூ.599-க்கு விற்பனை செய்யப்படும் என போடப்பட்டு இருந்தது. இதை வாங்க விரும்பிய நான் எனது டெபிட் கார்டு மூலம் காலணிக்கான பணத்தை செலுத்தினேன். ஆனால் அந்த பொருள் என்னை வந்து சேரவில்லை.

இழப்பீடு வழங்க வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சேவை எண்ணை தொடர்பு கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம் ரூ.7 ஆயிரத்து 568 மோசடி செய்தனர்.

பேஸ்புக் நிறுவனம் மோசடி நபர்களுடன் கைகோர்த்து இதுபோன்ற போலியான விளம்பரங்களை வெளியிட்டு மக்களிடம் பணம் பறித்து வருகிறது. எனவே நான் சந்தித்த பிரச்சினைகளுக்கு ஈடாக ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 568 இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

தீர்ப்பாயம் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பேஸ்புக் நிறுவனம் பாதிக்கப்பட்ட திரிபுவன் போங்கடேவுக்கு ரூ.599 தருமாறும், அவர் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு அபராதமாக ரூ.25 ஆயிரம் வழங்குமாறும் உத்தரவிட்டது.

மேலும் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க மோசடி தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடுமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

மேல்முறையீடு

இந்த நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து பேஸ்புக் இந்திய ஆன்லைன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் மேடா பிளாட்பாரம் இன்க் ஆகிய நிறுவனங்கள் சார்பில் மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உத்தரவிட்டனர்.

அப்போது நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் "இந்த பணபரிவர்த்தனை சம்பவத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் திரிபுவன் போங்கடேவிடம் இருந்து நிறுவனம் எந்த பணமும் பெறவில்லை. பேஸ்புக் நிறுவனம் ஒரு இ- காமர்ஸ் நிறுவனம் இல்லை. எனவே இந்த சம்பவத்திற்கு நிறுவனம் பொறுப்பேற்க முடியாது" என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி மணீஷ் புடலே தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தார். இருப்பினும் பேஸ்புக் இந்தியா நிறுவனம் அபராத தொகையை கோர்ட்டில் டெபாசிட் செய்ய உத்தரவு பிறப்பித்தார். மேலும் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வழக்கை நவம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.


Next Story