லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் சாவு

ஹிங்கோலி அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். லாரியில் கொண்டு செல்லப்பட்ட 150 ஆடுகளும் பலியாகின.
மும்பை,
ஹிங்கோலி அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். லாரியில் கொண்டு செல்லப்பட்ட 150 ஆடுகளும் பலியாகின.
லாரிகள் பயங்கர மோதல்
ஹிங்கோலி மாவட்டம் நாந்தெட்-கலம்நூரி சாலையில் மாலேகாவ் பாட்டா கிராமம் அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில் லாரி ஒன்று மார்பிள் கற்களை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த லாரியும், எதிரே ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் ஆடுகளை ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கி உருக்குலைந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
4 பேர் பலி
இதில் ஆடுகள் ஏற்றி சென்ற லாரியில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார். பலியானவர்கள் பாரவூர்தியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் அந்த லாரியில் இருந்த 150 ஆடுகளும் பலியாகின. லாரிகள் மோதிய விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய 2 லாரிகள் மற்றும் பலியான ஆடுகளை உள்ளூர் மக்கள் உதவியுடன் போலீசார் அகற்றினர். இதன் பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.