சாக்க்ஷி மாலிக்... பெண்களுக்கு தரும் நம்பிக்கை


சாக்க்ஷி மாலிக்... பெண்களுக்கு தரும் நம்பிக்கை
x
தினத்தந்தி 5 March 2017 8:32 AM GMT (Updated: 5 March 2017 8:32 AM GMT)

இந்திய பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் கதாநாயகியாக திகழ்கிறார், சாக்க்ஷி மாலிக்.

ந்திய பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் கதாநாயகியாக திகழ்கிறார், சாக்க்ஷி மாலிக். ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியர்களை பெருமிதம் கொள்ளச்செய்த இவர், இந்திய பெண்களுக்கு தரும் தன்னம்பிக்கை செய்தி!

* மற்றவர்களுக்காக உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டாம்:

‘‘நான் மல்யுத்த விளையாட்டை தேர்வு செய்தபோது வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நீ விளையாட்டுத்துறையில் பெரிய நட்சத்திரமாக வரவேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோருடைய ஆசையும். ஆனால் மல்யுத்த போட்டி உனக்கு சரிப்பட்டு வராது. வேறு ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடு’ என்றார்கள். ‘எனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ? அதில் தானே நான் முன்னுக்கு வர முடியும்?’ என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ‘காதில் அடிபட்டு உன் காது செவிடாகிவிடும்’ என்று பயமுறுத்தினார்கள். ‘என் காதுகளை என்னால் காப்பாற்றிக் கொள்ள முடியும்’ என்று அவர்களுக்கு உறுதியளித்து, எனக்கு பிடித்த மல்யுத்த விளையாட்டையே தேர்ந்தெடுத்தேன். அதுபோல் நீங்களும் மற்றவர்களுக்காக உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். எது சரி என்று தெரிகிறதோ அதில் பிடிவாதமாக இருங்கள்.

* குடும்பத்தினர் சம்மதத்தையும் பெறுங்கள்:

‘‘எனக்கு பதிலாக என் அண்ணன் சச்சின் மல்யுத்த விளையாட்டை தேர்வு செய்திருந்தால், வீட்டில் எந்த எதிர்ப்பும் கிளம்பியிருக்காது. நான் பெண் என்பதால், எனக்கு மட்டும் இவ்வளவு கட்டுப்பாடு. என்னுடைய முடிவை ஏற்க மறுத்து 6 நாட்கள் வீட்டில் சர்ச்சை தொடர்ந்தது. கடைசியில் ஒரு வழியாக அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். அவர்களது சம்மதத்தை பெற்றது எனக்கு கிடைத்த முதல் வெற்றி. நீங்களும் உங்கள் பிடிவாதமான முயற்சிகளுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பையும் பெற்று விடுங்கள்.

* ஆழ்மனதில் ஆசை கொள்ளுங்கள்:

நீங்கள் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்றால், அந்த ஆசை உங்கள் ஆழ்மனதைத் தொட்டிருக்கவேண்டும். விருப்பம் அடிமனதில் பதிந்திருக்கவில்லை என்றால் சாதிக்க முடியாது. எந்த ஒரு வெற்றி இலக்கை தேர்வு செய்யும்போதும் மனமும், விருப்பமும் அதில் முழுஈடுபாட்டோடு ஒன்றிணையவேண்டும்.

* விமர்சனங்களுக்கு பதிலடி கொடுங்கள்:

பெண்கள் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக ஏதாவது செய்வதற்கு முயற்சிக்கும்போது பல எதிர்ப்புகள் வரும். ஆனால் வித்தியாசமான வி‌ஷயங்கள்தான் மற்றவர்களை வசீகரிக்கும். நான் மல்யுத்த களத்தை தேர்வு செய்தபோது பலரும் விமர்சித்தார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒலிம்பிக்கில் நான் பெற்ற வெற்றி எல்லோருடைய வாயையும் அடைத்துவிட்டது. நீங்களும் உங்கள் சாதனைகள் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுங்கள்.   

* பெண்களுக்கு பெண்கள் ஆதரவு கொடுங்கள்:   

நம்முடைய நாட்டை பொறுத்தவரை ஆண்–பெண் பாலின பாகுபாடு அதிகமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வி‌ஷயத்திலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு அவர்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை விழுகிறது. அதையும் மீறி வெளிவந்தவர்கள் ஒரு சிலரே. அப்படி போராடும் பெண்களுக்கு பெண்களே ஆதரவு தருவதில்லை. இந்த குறைபாடு நீங்கவேண்டும். பெண்களாகிய நீங்கள் முன்னேற விரும்பும் மற்ற பெண்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

* களத்தில் பெண் என்பதை மறந்துவிடுங்கள்:

பயிற்சி களத்திற்கு சென்றதும் நான் ஒரு பெண் என்பதையே முற்றிலும் மறந்து விடுவேன். பயிற்சி ஒன்றுதான் என்னுடைய குறிக்கோளாக இருக்கும். மாநில அளவில் சிறந்த வீராங்கனையாக தேர்ச்சி பெற்று முதல் பதக்கத்தை வென்றபோது எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்தேன். அதற்கு பிறகுதான் என் மீது பதிந்திருந்த சமூகத்தின் பார்வை மாறுபட்டது. நீங்களும் எந்த துறையில் ஈடுபட்டாலும், ‘நாம் ஒரு பெண் அல்லவா!’ என்று அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.

* ஆர்வமுள்ளவர்களுக்கு உதவுங்கள்:

 விளையாட்டுத் துறையில் முன்னுக்கு வரக்கூடிய சிறுவர்–சிறுமிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுள் பலர் வசதி இல்லாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். எனக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்களில் எனக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு மற்றவற்றை எனக்குத் தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடுவேன். பெண்களுக்கான மல்யுத்த பயிற்சி கூடம் ஒன்றை ஆரம்பிக்க வெகு நாளாக திட்டமிட்டிருந்தேன். அதை விரைவில் செயல்படுத்த போகிறேன். மல்யுத்த போட்டியில் நிறைய பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. என் ஆசை நிறைவேற, நம் நாடு முன்னேற நீங்களும் விளையாட்டில் ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உங்கள் ஆதரவு கரத்தை நீட்டுங்கள்.

* நேரமல்ல, நுட்பமே முக்கியம்:

 மணிக்கணக்கில் பயிற்சி செய்வது மட்டுமே வெற்றிக்கு வழியல்ல. பயிற்சியையும் தாண்டி பல நுணுக்கங்கள் எல்லா விளையாட்டிலும் இருக்கிறது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது புலப்படும். அதுவே வெற்றிக்கு காரணமாகவும் இருக்கும். அதனால் நுட்பமாக உழைத்து வெற்றியை குவியுங்கள்.

* உங்களைவிட மற்றவர்கள்  பலசாலி:

நான் எப்போதும் என் எதிரில் இருப்பவரை அதிக பலசாலியாக நினைத்துக்கொள்வேன். அப்போதுதான் எனக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் அதிகமாக இருக்கும். அப்படித்தான் ஜெயித்தேன். நீங்களும் இதை பின்பற்றுங்கள்.

Next Story