ஐ.எஸ்.எஸ்.எப். உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்


ஐ.எஸ்.எஸ்.எப். உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 23 Feb 2019 9:47 AM GMT (Updated: 23 Feb 2019 9:37 PM GMT)

ஐ.எஸ்.எஸ்.எப். உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.

புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் 101 வீராங்கனைகள் தகுதி சுற்றில் களம் இறங்கினர். தகுதி சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை அபுர்வி சண்டிலா 629.3 புள்ளிகளுடன் 4-வதாக வந்து 8 வீராங்கனைகளில் ஒருவராக இறுதி சுற்றுக்குள் நுழைந்தார். ஆனால் இறுதிப்போட்டியில் அபுர்வி சண்டிலா வைத்த குறி தப்பவில்லை. இதில் அபாரமாக செயல்பட்ட அபுர்வி சண்டிலா 252.9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய உலக சாதனையும் படைத்தார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு சாங்வானில் நடந்த உலக போட்டியில் சீன வீராங்கனை ரோஷூ ஜாவ் 252.4 புள்ளிகள் குவித்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அபுர்வி சண்டிலா தகர்த்தார். சீன வீராங்கனைகள் ரோஷூ ஜாவ் 251.8 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஹாங் சூ 230.4 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோட்ஜில், இளவேனில் ஆகியோர் தகுதி சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

சாதனை மங்கை ஜெய்ப்பூரை சேர்ந்த 26 வயதான அபுர்வி சண்டிலா உலக கோப்பை போட்டியில் வென்ற 3-வது பதக்கம் இதுவாகும். அவர் ஏற்கனவே 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story