விளையாட்டு வீரர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து பேட்டி


விளையாட்டு வீரர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து பேட்டி
x
தினத்தந்தி 27 April 2019 7:26 AM GMT (Updated: 27 April 2019 7:26 AM GMT)

விளையாட்டு வீரர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து தெரிவித்தார்.

சென்னை,

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 17 பதக்கங்களை குவித்து 4-வது இடம் பிடித்தது. இதில் இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தவர் தமிழகத்தை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி. 800 மீட்டர் ஓட்டத்தில் களம் கண்ட அவர் தொடக்கத்தில் சற்று பின்தங்கினாலும் அதன் பிறகு துரிதமாக முன்னேறி 2 நிமிடம் 02.70 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார்.

30 வயதான கோமதியின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமம். 10 ஆண்டுகளுக்கு முன்பு தடகளத்தில் கால்பதித்த அவர் இப்போது தங்க மங்கையாக உருவெடுத்து இருக்கிறார். இன்று சாதனை மங்கையாக அறியப்பட்டாலும் இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். கூலித்தொழிலாளியான இவரது தந்தை மாரிமுத்து கடந்த 2016-ம் ஆண்டு இறந்து விட்டார். ஆனாலும் விடா முயற்சியோடு போராடியதற்கான பலன் இப்போது அவருக்கு கிடைத்துள்ளது.

தமிழகம் திரும்பிய தங்கமங்கை கோமதி மாரிமுத்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோமதி மாரிமுத்து கூறியதாவது:- “விளையாட்டு வீரர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும், என்னை போல் பல வீராங்கனைகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் தான் பயிற்சியை மேற்கொண்டேன், ஊக்கமளித்தால் தொடர்ந்து சாதனை புரிவேன்” என்றார். 

இதற்கிடையே,  தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் தங்கை மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தமிழநாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழிகிரி அறிவித்துள்ளார்.

Next Story