சென்னை வாள்சண்டை வீரர் பவானி தேவியின் பெயர் அர்ஜூனா விருதிற்குப் பரிந்துரை


சென்னை வாள்சண்டை வீரர் பவானி தேவியின் பெயர் அர்ஜூனா விருதிற்குப் பரிந்துரை
x
தினத்தந்தி 27 May 2020 9:51 AM GMT (Updated: 27 May 2020 9:51 AM GMT)

சென்னையைச் சேர்ந்த வாள்சண்டை வீரர் பவானி தேவியின் பெயர் அர்ஜூனா விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வருடத்திற்கான அர்ஜூனா விருது பெயர் பட்டியலை அந்தந்த விளையாட்டுச் சங்கங்கள் ஜூன் 3-ஆம் தேதிக்குள் விளையாட்டு அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட வீரர்களிலிருந்து விளையாட்டு அமைச்சகம்  அர்ஜூனா விருது யாருக்கு என்ற இறுதிப் பட்டியலைத் தேர்வு செய்யும்.

இந்தியாவின் நம்பர் ஒன் வாள் சண்டை வீராங்கனையான பவானி தேவி 2009-ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். உலகக் கோப்பை வாள்சண்டை போட்டியின் சேபர் பிரிவில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற டூர்னோய் சேட்டிலைட் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது இவரது பெயர் பரிந்துரை செய்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அத்துடன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தலா ஒரு வெள்ளி, வெண்கலப் பதக்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கம் என சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வரும் பவானி தேவி, இந்தியா சார்பில் ஒலிம்பிக் பதக்கக் கனவுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இவரது பெயர் வாள்சண்டை கூட்டமைப்பு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Next Story