உலக இளையோர் குத்து சண்டை போட்டிகள்; 7 தங்க பதக்கங்களுடன் வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள்

இந்திய குத்து சண்டை வீராங்கனைகள் 7 தங்க பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர்.
புதுடெல்லி,
உலக இளையோர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் போலந்து நாட்டில் நடந்து வருகின்றன. இதில், மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை கீத்திகா நார்வால் நாட்டிற்கான முதல் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். அவர், போட்டியை நடத்தும் போலந்து நாட்டின் நடாலியா டாமினிகாவை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
இதேபோன்று 51 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் பேபிரோஜிசனா சானு ரஷ்யாவின் வாலேரியா லின்கோவாவை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கான 2வது தங்க பதக்கத்திற்கு வழியேற்படுத்தினார்.
இந்தியாவின் வீராங்கனைகளான பூனம் (57 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), சனமசா சானு (75 கிலோ) மற்றும் ஆல்பியா பதான் (81 கிலோ) ஆகிய 5 பேரும் இறுதி போட்டியில் விளையாடி தங்கம் வென்றனர்.
ஆசிய இளையோர் சாம்பியனான சனாமச்சா சானு நாட்டிற்கான 6வது தங்க பதக்கமும் மற்றும் மராட்டியத்தின் ஆல்பியா 7வது தங்க பதக்கமும் பெற்று தந்து பெருமை தேடி தந்தனர். இதனால், சாம்பியன்ஷிப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 7 தங்க பதக்கங்களுடன் இந்திய மகளிர் அணி முதல் இடம் பிடித்துள்ளது.
ஆடவர் பிரிவில், சாங்தம் (49 கிலோ), அன்கித் நார்வால் (64 கிலோ) மற்றும் விஷால் குப்தா (91 கிலோ) என 3 பேரும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். சச்சின் (56 கிலோ) இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் விளையாடுகிறார். இதில் பதக்கம் கிடைப்பது நிச்சயம்.
அதனால், 20 பேர் கொண்ட இந்திய அணி 11 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்து உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த போட்டியில் 10 பதக்கங்களை வென்றிருந்ததே சாதனையாக இருந்தது.
Related Tags :
Next Story