பாராலிம்பிக் பேட்மிண்டன்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்!


பாராலிம்பிக் பேட்மிண்டன்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்!
x
தினத்தந்தி 5 Sep 2021 2:44 AM GMT (Updated: 5 Sep 2021 2:44 AM GMT)

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ, 

டோக்கியோ பாராலிம்பிக் பாரா பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆடவர் எஸ்.எல் 4 பிரிவு பாரா பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சுகாஷ் யத்திராஜ் இன்று நடைபெறும் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுகாஷ் யத்திராஜ், பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார். 20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பிரான்சு வீரர் லூகாஸ் 17-21 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது சுற்று நடத்தப்பட்டது.  அதில் பிரான்சு வீரர் லூகாஸ் 15-21 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்படி இந்திய வீரர் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு இது 8ஆவது வெள்ளிப்பதக்கமாகும். 

கர்நாடக மாநில பிறந்தவரான சுகாஷ் யத்திராஜ் 2007ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய ஐஏஎஸ் அதிகாரி வெள்ளிப்பதக்கத்தை வென்றார் என்ற சாதனையை சுகாஷ் யத்திராஜ் படைத்துள்ளார்.  

Next Story