அர்ஜுனா விருதை மத்திய மந்திரியிடம் பெற்றுக்கொண்ட பவானி தேவி


அர்ஜுனா விருதை மத்திய மந்திரியிடம் பெற்றுக்கொண்ட  பவானி தேவி
x
தினத்தந்தி 16 Nov 2021 5:49 AM GMT (Updated: 16 Nov 2021 5:49 AM GMT)

இந்தியாவில் இருந்து முதல் நபராக ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் பங்கெடுத்து , தொடக்க போட்டியில் அசத்திய பவானி தேவிக்கு மத்திய அரசு அர்ஜுனா விருதை அறிவித்தது

டெல்லி 

சென்னையை சேர்ந்த 28 வயது வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. இவர் இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருந்தார் . இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற முதல் நபர் என்ற பெருமையை பவானி  தேவி பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது முதல் போட்டியில் துனிசியாவின் நாடியா பென் அசிசிக்கு எதிராக பவானி தேவி  15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.பின்னர் இரண்டாவது சுற்றில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரான்சின் மனோன் புருனெட்டிடம்  தோல்வியடைந்தார்.

இருப்பினும் இந்தியாவில் இருந்து முதல் நபராக ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில்  பங்கெடுத்து , தொடக்க போட்டியில் அசத்திய பவானி தேவிக்கு மத்திய அரசு அர்ஜுனா விருதை அறிவித்தது.

நேற்று முன்தினம் நடந்த விளையாட்டு வீரர்களுக்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அந்த தினம் பிரான்சு நாட்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றதால் பவானி தேவியால் விழாவில் பங்கேற்க முடியவில்லை.

இதனால் பிரான்சு நாட்டில் இருந்து நாடு திரும்பிய பவானி தேவி தனது அர்ஜுனா விருதை மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குரிடம் இருந்து நேற்று பெற்று கொண்டார்.

அர்ஜுனா விருது பெற்ற பின் பவானி தேவி தனது  டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :

அர்ஜுனா விருதை பெறுவது என்பது  எனது சிறுவயது கனவு. இன்று அது நடந்ததுள்ளது . நாட்டிற்காக கடினமாக உழைத்து விளையாடுங்கள். ஒரு நாள் நிச்சயம் அதற்கு பலன் கிடைக்கும் . நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Next Story