சிறப்புக் கட்டுரைகள்

வயதானவர்களுக்கும் தடுப்பூசி உண்டு + "||" + The elderly also have vaccine

வயதானவர்களுக்கும் தடுப்பூசி உண்டு

வயதானவர்களுக்கும் தடுப்பூசி உண்டு
இன்று (மார்ச் 16-ந் தேதி) தேசிய தடுப்பூசி தினம். குழந்தைகளுக்குதான் தடுப்பூசி போட வேண்டும் என்று ஒரு காலம் இருந்தது. ஆனால் தற்போது வயதானவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிலை வந்துள்ளது.
வயது ஆக ஆக (சுமார் 50 வயதிற்கு மேல்) உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அதனால் தொற்று நோய்கள் வயதானவர்களை எளிதில் தாக்குகிறது. அதில் இருந்து பாதுகாத்து கொள்ள வயதானவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது அவசியமாகிறது.

முதுமை, நீரிழிவு நோய், புற்றுநோய், ஸ்டீராய்டு மாத்திரை, புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகள் மற்றும் சத்துணவு குறைவு போன்ற பல காரணங்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதை தவிர முதுமையின் விளைவாக உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் தொற்று நோய்கள் வரலாம். தோல் மிகவும் மெலிதாகி விடுவதனால் தோல் சிராய்ப்பு அல்லது புண்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது. ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினால் சிறுநீர் பையில் நீர் தேங்கி பூச்சி தொல்லை ஏற்படலாம்.

முதுமையில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மார்பக நோய்களான புளூ, நிமோனியா, காசநோய் போன்றவற்றால் பாதிக்கப்படலாம். சிறுநீர் தாரை நோய்களால் ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் பிறப்பு உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் பை சரிவர சுருங்கி விரிவடையாத நிலை ஏற்படலாம். கெட்டுப்போன உணவுகளை உண்பதால் டைபாய்டு, சீதபேதி, பித்த பையில் பூச்சி தொல்லைகள் ஏற்படலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு படை மற்றும் சின்னஞ் சிறு கொப்பளங்களும், அம்மை நோய்களும் வரலாம். மூளை, எலும்பு மற்றும் இதய வால்வுகளிலும் தொற்று நோய்கள் வரலாம்.

சில தொற்று நோய்களுக்கு தடுப்பூசி போட்டு கொள்வதின் மூலம் அந்த நோய்கள் வராமலே தடுத்து நலமாக வாழ முடியும். முதுமை காலத்தில் நலமாய் வாழ சீரான உணவு முறையும், உடற்பயிற்சியும் எப்படி அவசியமோ அதைபோலவே தடுப்பூசியும் அவசியம்.

வயதானவர்கள் அடிக்கடி மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதற்கும், உடல்நலம் குன்றி இறப்பதற்கும் நிமோனியா மூலக்காரணமாக இருக்கிறது. இது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று நோய். இந்த நோய் உள்ளவர்கள் இருமும்போது காற்றின் மூலம் மற்றவர்களுக்கு பரவும். இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல், உடல்வலி மற்றும் வாந்தி இருக்கும். இதை தொடர்ந்து இருமல், சளி, மூச்சு திணறல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும்போது சிலருக்கு சளியில் ரத்தம் கலந்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் காது, தலை (சைனஸ்) மற்றும் மூளையை பாதித்து உயிருக்கே கூட ஆபத்து விளைவிக்கும்.

மிகவும் வயதானவர்களுக்கு மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை வருவதற்கு இந்த நோய் காரணமாகலாம். வயதானவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து உண்பவர்கள், சமீபத்தில் ‘ப்ளூ’ காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், தூசி நிறைந்த இருப்பிடத்தில் வசிப்பவர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், புற்றுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோருக்கு நிமோனியா வர வாய்ப்பு உள்ளது.

‘இன்புளூயன்ஸா’ என்பது வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு நோய். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ ‘நோய் கிருமி’ வெளிப்பட்டு மற்றவர்களுக்கு எளிதாக பரவி வருகிறது. இந்த நோய் முக்கியமாக குளிர் காலத்தில்தான் தாக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், குளிர், உடல்வலி, சோர்வு, தலைவலி, பசியின்மை, தொண்டையில் ஒருவித வலி மற்றும் சளி அதிகம் ஈல்லாத இருமல் உண்டாகும். சுமார் 70 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோயுடன் ‘நிமோனியா’ போன்ற சளி தொல்லையும் கூடவே வர வாய்ப்பு உண்டு. இந்த புளூ காய்ச்சல் சுமார் 7 முதல் 10 நாட்களில் சரியாகிவிடும். உயிருக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த நோயை வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி உண்டு. வருடத்திற்கு ஒருமுறை போட்டுக் கொள்வது நல்லது. இந்த ஊசியினால் பக்க விளைவுகள் எதுவும் வராது. இந்த ஊசியை ஆஸ்துமா, நீரிழிவுநோய், இருதயநோய், புற்றுநோய் மற்றும் சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

வயதான காலத்தில் அடிக்கடி கீழே விழுந்து, உடம்பில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகையால் வயதானவர்கள் இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொள்வது நல்லது. டைப்பாய்டு நோய் வராமல் தடுக்க, வாய் வழியாகவோ அல்லது ஊசி மூலமாகவோ இந்த நோயிற்கான தடுப்பு மருந்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்து கொள்ளலாம்.

வயதானவர்கள் எல்லோருக்கும் ‘ஹெப்படைட்டிஸ் பி’ பரிந்துரைக்க படுவதில்லை. அடிக்கடி ரத்தம் செலுத்துபவர்கள், அடிக்கடி திரவ ஊசி போட்டுக் கொள்பவர்கள் மற்றும் நரம்பு ஊசி போட்டுக் கொள்பவர்களுக்கு இந்த ஊசி தேவைப்படும். மொத்தத்தில் மூன்று ஊசிகள் போட்டுக் கொள்ளவேண்டும். முதல் ஊசி போட்ட ஒரு மாதத்தில் இரண்டாவது ஊசியையும், ஆறு மாதம் கழித்து மூன்றாவது ஊசியையும் போட்டுக் கொள்ளவேண்டும். நம் நாட்டில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து முதியோர்களுக்கும் இலவசமாக நிமோனியா தடுப்பூசி போட வேண்டும். தமிழக அரசு எங்கள் அறக்கட்டளை சார்பாக விடுத்த கோரிக்கையை ஏற்று, அரசு நடத்தும் முதியோர் இல்லங்களில் உள்ள 4133 பேருக்கு நிமோனியா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. நோய் வந்த பின்பு சிகிச்சை பெற்று பணம் மற்றும் நேரத்தை விரயம் செய்வதைவிட, அதை வராமல் தடுப்பதே சாலச் சிறந்தது. “போலியோ இல்லாத நாடு போல், விரைவில் நிமோனியா இல்லாத நாடாக, இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்”.

- டாக்டர் வி.எஸ்.நடராஜன்,  முதியோர் நல மருத்துவர், சென்னை.

தொடர்புடைய செய்திகள்

1. ஆரணி அருகே, தடுப்பூசி போடப்பட்ட குழந்தை சாவு - ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
ஆரணி அருகே தடுப்பூசி போடப்பட்டதால் 4 மாத ஆண் குழந்தை இறந்ததாகக்கூறி, ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
2. தொற்றுநோய் பரவுவதை தடுக்க துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி நகராட்சி ஆணையர் தகவல்
தொற்றுநோய் பரவுவதை தடுக்க துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறினார்.