மன ஆரோக்கியத்துக்கு அவசியமான '5'


மன ஆரோக்கியத்துக்கு அவசியமான 5
x

உடல் நலனை போலவே மன நலன் மீதும் அக்கறை கொள்வது அவசியமானது. அன்றாடம் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் கூட மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

சோம்பேறித்தனம் குடிகொள்வது, இரவு தாமதமாக தூங்க செல்வது, துரித உணவுகளை சாப்பிடுவது, காலையில் தாமதமாக எழுவது போன்றவை உடல் நலனை பாதிக்கும். அதன் தாக்கம் மன நலனில் வெளிப்படும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுவதற்கு அன்றாடம் பின்பற்ற வேண்டிய 5 அவசியமான பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

தியானம்:

மன காயங்களை போக்கவும், தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை தவிர்க்கவும் தியானம் சிறந்த வழியாகும். இது மனதை அமைதிப்படுத்தும், தசைகள் மற்றும் நரம்புகளை தளர்வடைய செய்யும். மனதை அமைதியான நிலைக்கு இட்டுச் செல்லும். தினமும் தவறாமல் தியானம் செய்வது மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உண்டாக்கும்.

மனம் அமைதியடைந்து விட்டாலே நோய் பாதிப்புகள் எதுவும் நெருங்காது. காலையில் அல்லது தூங்குவதற்கு முன்பு 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் செய்யலாம். வீட்டில் தியானம் செய்வதற்கு ஏதுவாக அமைதியான சூழல் கொண்ட அறையை தேர்ந்தெடுங்கள்.

இயற்கையோடு நேரத்தை செலவிடுங்கள்:

வீட்டுக்குள் முடங்கி கிடப்பது, அலுவலக அறை சூழலுக்குள் கணினி திரைகள் முன்பு பல மணி நேரங்களை செலவிடுவது உடலையும், மனதையும் சோர்வாக்கும். இயற்கையுடன் சில நிமிடங்கள் செலவிடுவது உடலையும், மனதையும் புதுப்பிக்க உதவும். அறை சூழலில் இருந்து விடுபட்டு சில நிமிடங்கள் இயற்கை சூழல் கொண்ட இடத்திற்குள் நுழைந்து புதிய காற்றை சுவாசிப்பது மூளைக்கு புத்துணர்வை கொடுக்கும். மனதை லேசாக்கும். வேலைக்கு புறப்படுவதற்கு முன்போ அல்லது பணி முடிந்து வீடு திரும்பிய பிறகோ பூங்கா போன்ற பசுமையான பின்னணி கொண்ட இடங்களில் சில நிமிடங்களை செலவிடலாம். அந்த இடங்களில் நடைப் பயிற்சி, ஜாக்கிங் போன்றவையும் மேற்கொள்ளலாம். விடுமுறை தினங்களில் இயற்கை சூழந்த இடங்களில் படகு சவாரி போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடலாம்.

ஆரோக்கியமான உணவை பின்பற்றுங்கள்:

ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் உணவு தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சரிவிகித உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருவதோடு பசியையும் கட்டுப்படுத்தும். பச்சை இலை காய்கறிகள், பழங்கள், `சாலட்'டுகள், பழச்சாறுகள் பருகலாம். முடிந்தவரை சர்க்கரை, பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. உணவு சாப்பிடும்போது டி.வி, செல்போன் போன்றவற்றை பார்வையிடுவதை தவிர்த்துவிடுவதும் நல்லது. வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் உணவை நன்கு மென்று சாப்பிடுவது, உணவின் மூலம் அனைத்து நன்மைகளையும் பெற உதவும். மனமும், ஆன்மாவும் திருப்தி அடையும்.

ஆழ்ந்த சுவாசம்:

ஆழ்ந்த சுவாசம் எதிர்மறை எண்ணங்களை மாற்றும் சக்தி கொண்டது. கவலையான தருணங்களில், மூச்சை நன்றாக உள் இழுத்து வெளியிட்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுவது உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். நரம்புகள் புத்துயிர் பெற உதவும். மனம் அமைதியை உணரும். எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் மனதில் இருந்து வெளியேறும்.

குழந்தையைப் போல தூங்குங்கள்:

இரவில் நன்றாக தூங்குவது உடல், மனம் மற்றும் ஆன்மாவை பலப்படுத்த உதவும். தூக்கம் ஆரோக்கியத்திற்கு தேவையான வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடும். போதுமான அளவு தூங்குவது மறுநாள் புத்துணர்வுடனும், திறமையாகவும் செயல்பட வழிவகை செய்யும். குழந்தை போல் தூங்கி எழும் வழக்கத்தை பின்பற்றினால் உடலும், மனமும் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்படும்.


Next Story