ஆதித்யா எல்-1: சூரியனை நோக்கி பயணம்


ஆதித்யா எல்-1: சூரியனை நோக்கி பயணம்
x

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனதுபொன்விழா ஆண்டை கடந்த நிலையில் அதன்கனவு திட்டமான சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் திட்டப்பணிகள் (ஆதித்யா எல்-1) தற்போது இறுதிகட்டத்தை எட்டி இருக்கின்றன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) பயணம் நீண்ட நெடியது. 1969-ல் பெங்களூருவில் தொடங்கப்பட்ட இஸ்ரோவிற்கு முன்னதாகவே நாம் விண்வெளி ஆராய்ச்சியைத் தொடங்கி இருந்தோம். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி குழுவின் முயற்சியால் இஸ்ரோ தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் ரஷியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் தொழில்நுட்ப உதவியுடன் விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டு வந்தன.

இந்தியாவின் முதல் ராக்கெட்டான ''ஆர்யப்பட்டா'' 1975-ம் ஆண்டு அப்போதைய சோவியத் ரஷியாவில் இருந்து ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட சிறிய வகை ஒலி விண்கலமான ''ரோகிணி'' 1979-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு விண்கலங்கள் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும், விண்வெளியின் வேறு பகுதிகளுக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக அனுப்பப்பட்டன.

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்

இஸ்ரோ கடந்த 2018-ம் ஆண்டு தனது 100-வது செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி அனைத்து உலக நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது இஸ்ரோ உலகின் 6-வது பெரிய விண்வெளி மையமாக திகழ்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்தியா முதன் முதலில் புவியின் சுற்றுப்பாதையைத் தாண்டிய தேடலாக கடந்த 2008-ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-1 என்ற ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் விண்கலமும், 2019-ம் ஆண்டில் நிலவுக்கு மீண்டும் சந்திராயன்-2 என்ற விண்கலமும் ஏவப்பட்டு, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை இந்தியா எட்டியது.

இதில் அடுத்தகட்டமாக நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் திட்டமும், நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவின் கனவு திட்டமாக வடிவமைக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில் சூரியனுக்கு அனுப்பப்பட உள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுடன் இணைந்து இஸ்ரோ கட்டமைத்து வருகிறது.

இந்த திட்டத்தை வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடித்து விண்ணில் ஏவ இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு இதற்கான முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி- சி56 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனுக்கு ஏவப்பட உள்ளது.

சூரிய புயல்

இந்த விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் ''லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும். மேலும் சூரியனுடைய வெளி அடுக்கு மற்றும் அருகாமை புற ஊதாக்கதிர்களை ஆய்வு செய்வதே முக்கிய நோக்கமாகும்.

இந்த விண்கலம் லெக்ராஞ்சியன் முதல் புள்ளியில் நிலை நிறுத்தப்படுவதன் மூலம் நாம் பூமியில் இருந்து சூரியனை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

சூரியனுக்கு விண்கலம் அனுப்புவது விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் சவாலாகவே இருந்து வருகிறது. குறிப்பாக பூமியில் இருந்து சூரியனின் தூரம் 149 மில்லியன் கி.மீட்டராக உள்ளது. ஆனால் நிலவு வெறும் 3.84 லட்சம் கி.மீட்டர் தூரம் மட்டுமே.

2-வது காரணம், சூரிய வளிமண்டலத்தில் உள்ள அதீத வெப்ப நிலையும், கதிர்வீச்சும். இந்த சவால்களை கடந்து இஸ்ரோ வரும் ஜனவரி மாதம் சாதனை படைக்கும் என இந்திய தேசமே எதிர்பார்த்து கிடக்கிறது. பூமியை நோக்கி வரும் சூரிய புயல்களை அறிந்து கொள்ளவும், அதன் தாக்கத்தை தணிக்கவும் தொடர்ச்சியாக சூரியன் குறித்த ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது.

'லெக்ராஞ்சியன்' புள்ளிகள்

சூரியனைச் சுற்றி இருக்கும் 5 'லெக்ராஞ்சியன்' புள்ளிகளைக் காட்டும் படம். ஆதித்யா எல்-1 விண்கலம் அதில் முதல் புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது.

சூரியனுக்கு செல்ல உள்ள ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ள பகுதி 'லெக்ராஞ்சியன்' புள்ளி எனப்படுவதாகும்.


புவி மற்றும் சூரியன் அல்லது புவி மற்றும் சந்திரன் என்ற இருபெரும் வான்பொருட்களின் கூட்டு ஈர்ப்பு விசை 3-வது சிறிய வான் பொருளினால் உணரப்படும்.

இந்த மைய விலக்கு விசையினை சமப்படுத்தும் விண்வெளியில் உள்ள ஒரு இடமே 'லெக்ராஞ்சியன்' புள்ளி என்று அழைக்கப்படுகிறது.

சூரியனைச் சுற்றி மொத்தம் 5 லெக்ராஞ்சியன் புள்ளிகள் உள்ளன. நமது ஆதித்யா எல்-1 விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ள முதல் லெக்ராஞ்சியன் புள்ளி பூமி மற்றும் சூரியனுக்கு இடையில் உள்ளது. இந்த புள்ளியில் விண்கலத்தை நிலை நிறுத்தும்போது கிரகணங்கள் போன்ற நிகழ்வுகளின் தடங்கல்கள் இன்றி சூரியனை எந்த நேரமும் கண்காணிக்க இயலும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

லெக்ராஞ்சியன் 2-வது புள்ளி என்பது சூரியனுக்கு பின்புறமாக பூமி மற்றும் நிலவுக்கு அருகில் உள்ளது. இதில் விண்கலம் நிலை நிறுத்தப்படும் போது, விண்கலங்கள் ஆழ்ந்த வெளி பற்றி தெளிவான பார்வையைப் பெற முடியும் என தெரிவிக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு நாசா அனுப்பிய விண்கலம் இந்த புள்ளியில் தான் நிலை நிறுத்தப்பட்டது.

லெக்ராஞ்சியன் 3-வது புள்ளி என்பது புவியின் சுற்றுவட்ட பாதைக்கு எதிராக சூரியனின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த இடத்தின் பயன்பாடு இதுவரை வான்வெளி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை.

லெக்ராஞ்சியன் 4 மற்றும் 5-வது புள்ளிகள் சூரியனை மையமாக கொண்ட புவியின் சுற்று வட்டப்பாதையில் பூமிக்கு முன்னும், பின்னுமாக 600 டிகிரி கோணத்தில் உள்ளன.

இந்த புள்ளிகளில் தாதுக்களும், விண்கற்களும் குவிந்துள்ளன. இந்த புள்ளியை சுற்றி உள்ள விண்கற்கள் 'டிரோஜன்' என்று அழைக்கப்படுகின்றன. பூமிக்கு அறிமுகமான ஒரே விண்கல்லான 2010 டி.கே.7 என்ற விண்கல் இந்த புள்ளியில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

'சூரியனை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்' -விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட இருக்கும் 'ஆதித்யா எல்-1' செயற்கை கோள் குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:-

ஆதித்யா எல்-1 திட்டம் சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் கனவு திட்டமாகும். தற்போது அதன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மையத்தை சுற்றி ஆதித்யா எல்-1 செயற்கை கோள் செல்லும். சந்திரயான்-3 செயற்கை கோள் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இது முடிவடைந்த பின் ஆதித்யா எல்-1 விண்ணுக்கு அனுப்பப்படும். அப்போது உலக நாடுகளே நம்மைத் திரும்பி பார்க்கும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மையத்தை சுற்றி வரும் போது நமக்கு பல தகவல்கள் கிடைக்கும். இன்றைய சூழலில் சூரியனைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பிரமாண்டங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக அறிவியல் ரீதியாக சூரியனின் மையப் பகுதியில்தான் வெப்பம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து மேலே வரவர வெப்பம் குறைந்து கொண்டே இருக்கும். அதற்கு மேல் வெப்பம் குறைய வேண்டும். ஆனால் அதற்கு மேலே இன்னும் வெப்பம் அதிகமாகிறது. அதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரியன் எப்போதும் ஒரே மாதிரியாக தெரிந்தாலும் கருந்துகள்கள், சூரிய வெடிப்புகள் அவ்வப்போது உருவாகும். அதன் பாதிப்பு என்ன என்பது நமக்கு தெரிய வேண்டும். சூரியனின் கதிர்வீச்சுகள் தாக்காமல் புவியைச் சுற்றி உள்ள மின்காந்த புலம் நம்மை பாதுகாக்கிறது.

தற்போது பல்வேறு தேவைகளுக்காக நிறைய செயற்கை கோள்களை விடுகிறோம். இந்த செயற்கை கோள்கள் பூமியைச் சுற்றியுள்ள மின்காந்தத்திற்கு மேல் சுற்றி திரிகின்றன. சூரியனில் கருந்துகள் மற்றும் வெடிப்புகள் செயற்கை கோள்களை பாதிக்கின்றன. இதில் இருந்து செயற்கை கோள்களை பாதுகாக்க, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது நமக்கு 60-க்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இன்னும் நிறைய செய்து கொண்டு இருக்கிறோம். மழை, புயல், சுனாமி போன்ற பேரிடர்கால எச்சரிக்கைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிகிறதோ அதுபோல் சூரிய வெடிப்புகள், கருந்துகள்களால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து செயற்கை கோள்களை பாதுகாக்க ஆதித்யா எல்-1 பயனுள்ளதாக இருக்கும். நமது நாட்டின் செயற்கை கோள்கள் மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கும் இது உதவும். பருவ நிலை மாற்றத்திற்கு அனைத்து நாடுகளும் தகவல்களை பகிர்ந்து கொள்வோம். சில நேரங்களில் நாம் அமெரிக்காவுக்கே உதவி செய்துள்ளோம். அது போல் ஆதித்யா-எல்.1 செயற்கை கோளின் தகவமைப்புகள் வடிவமைக்கப்படும்.

இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.


Next Story