பெண்கள் தயாரிக்கும் மின்சார ஆட்டோ


பெண்கள் தயாரிக்கும் மின்சார ஆட்டோ
x

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் உள்ள தொழிற்சாலையில், முழுவதும் பெண் ஊழியர்களால் மின்சார ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

பெண்கள் பல்வேறு துறைகளில் கால்பதித்து சாதித்து வருகிறார்கள். அடுப்பறையில் தொடங்கி விண்வெளி வரை அவர்களின் சாதனைகள் நீண்டு வருகின்றன. ஆட்டோமொபைல் துறையிலும் பெண்கள் கால்பதித்து புதுமைகளை படைத்து வருகிறார்கள். இந்தநிலையில், ஆட்டோ தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் ஒன்று, பெண் ஊழியர்களை கொண்டு, புதுமையான மின்சார ஆட்டோக்களை தயாரித்து வருகிறது.

முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் மூன்று மாடல் ஆட்டோக்கள் வெகுவிரைவில் விற்பனைக்கும் வர உள்ளன. இவற்றின் விலை மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் உள்ள தொழிற்சாலையில், முழுவதும் பெண் ஊழியர்களால் இந்த ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள், இணைந்து மின்சார ஆட்டோக்களை வெற்றிகரமாக தயாரித்து இருக்கிறார்கள்.

மூன்று மாடல்களில், முதலாவது மாடல் 5.44 கிலோவாட் மோட்டாரை கொண்டது. அடுத்த மாடல், 9.55 கிலோ வாட் மோட்டாரை கொண்டது. இப்படி மாடல்களுக்கு ஏற்ப ஒரு முறை சார்ஜ் செய்தால் 115 கி.மீ. முதல் 145 கி.மீ. தூரம் வரை மைலேஜ் வழங்கும். தற்போது பேட்டரி நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்சார ஆட்டோக்கள் பயன்பாட்டிற்கு வந்தால், மக்கள் பயணத்திற்காக செய்யும் செலவும் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

''மின்சார ஆட்டோக்கள் வருகை, பராமரிப்பு செலவு மற்றும் எரிபொருள் தேவையை குறைக்கும்'' என்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். ''இது ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றும் பெண் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும்'' என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Next Story