விசா நடைமுறைகளை கடுமையாக பின்பற்றும் நாடுகள்


விசா நடைமுறைகளை கடுமையாக பின்பற்றும் நாடுகள்
x

வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகவோ, சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நோக்குடனோ செல்வதற்கு விசா அவசியமானது. ஒவ்வொரு நாட்டிலும் பிற நாடுகளின் தூதரகங்கள் செயல்படும். அங்கு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம். அந்த நாட்டுக்கு சென்ற பிறகு கூட அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம். அப்படி எளிமையான விசா அணுகுமுறைகளை கடைப்பிடிக்கும் நாடுகள் இருக்கின்றன. அதேவேளையில் கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகள் உள்ளன. அங்கு செல்வதற்கு விசா பெறுவதே கடும் போராட்டமாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட நாடுகளின் பட்டியல் இங்கே.

ரஷியா: மிகவும் சிக்கலான விசா நடைமுறைகளைக் கொண்ட பட்டியலில் ரஷியா முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டுக்கு செல்ல விண்ணப்பிப்பதற்குள் ஒருவித சோர்வு எட்டிப்பார்த்துவிடும். விண்ணப்ப படிவம் முழுவதும் கேள்விகள் நிறைந்திருக்கும். அனைத்திற்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். அத்துடன் கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

சீனா: சீனாவுக்குச் செல்ல விரும்பினால், நீண்ட விசா நடைமுறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், 53 நாடு களைச் சேர்ந்த விமானப் பயணிகள் விசா இல்லாமல் 13 நகரங்களில் 72 மணிநேரம் தங்கிக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் இருந்து செல்லும் விமான பயணிகள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. சீனாவுக்குள் நுழைவதற்கான விசாவை பெற ஏராளமான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வட கொரியா: ஹெர்மிட் கிங்டம் என்று அழைக்கப்படும் வட கொரியா, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அமைப்பின் மூலம் விண்ணப்பித்த பயணிகளுக்கு மட்டுமே விசா வழங்குகிறது. வேறு நடைமுறைகளை பின்பற்றினால் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது.

ஈரான்: வட கொரியாவைப் போலவே, ஈரான் செல்வதற்கும் அந்த நாடு அங்கீ கரித்திருக்கும் பயண நிறுவனத்திடம் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு சில நாடுகளின் குடிமக்களுக்கு அங்கு சென்ற பிறகு விசா பெறும் 'விசா ஆன் அரைவல்' கொள்கை நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை. கடந்த 6 மாதங்களில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய பயணிகள் ஈரானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

துர்க்மெனிஸ்தான்: துர்க்மெனிஸ்தானுக்கு செல்ல விசா விண்ணப்பிப்பதற்கே கடுமையான விதிகள் அமலில் இருக்கின்றன. துர்க்மெனிஸ்தானில் உள்ள ஏதேனும் ஒரு ஸ்பான்சரிடமிருந்து அழைப்புக் கடிதம் பெற்றிருக்க வேண்டும். அதனை விசா விண்ணப்பத்துடன் இணைப்பதும் கட்டாயம்.

சவுதி அரேபியா: சவுதி அரேபியா நாட்டிற்குள் நுழைய தங்குமிடத்திற்கான சான்று மற்றும் ஆறு மாத காலம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும். மேலும், புனித யாத்திரை நகரங்களான ெமக்கா மற்றும் மதீனாவிற்கு முஸ்லிம் அல்லாதவர்கள் செல்ல முடியாது.

ஆப்கானிஸ்தான்: மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஆப்கானிஸ்தான் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. 'டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்' வைத்திருக்கும் எந்தவொரு இந்திய குடிமகனும் விசா இல்லாமல் ஆப்கானிஸ்தானில் 30 நாட்கள் தங்குவதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தோனேசியா, துருக்கி, சீனா, ஈரான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 'டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்' வைத்திருக்கும் குடிமக்களுக்கும் விசாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story