பிளாஸ்டிக் இல்லாத பசுமைக் கடை


பிளாஸ்டிக் இல்லாத பசுமைக் கடை
x

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து கேரளாவில் பசுமை மளிகைக் கடைகளை நடத்தி வருகிறார், பொறியாளர் பிட்டு ஜான். இதன்மூலம் 12.5 டன் பிளாஸ்டிக் துண்டுகள் நிலத்தில் கொட்டப்படாமல் அவர் தவிர்த்திருக்கிறார்.

எர்ணாகுளத்தில் 9 பசுமைக் கடைகளை நடத்தும் இவர், அனைத்து மளிகைக் கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நூறு விழுக்காடு தவிர்த்துள்ளார். இது குறித்து பிட்டு ஜான், "2015-ம் ஆண்டு ஐரோப்பியாவுக்குச் சென்றபோது, அங்கு பசுமைக் கடைகள் இருப்பதை முதன்முறையாகப் பார்த்தேன்.

இந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் துணிப்பைகளைக் கொண்டுவந்து தங்களுக்கு வேண்டிய மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். என் தந்தை மளிகைக் கடை நடத்தி வந்தார். அதனால், என் தந்தையின் கடையை இதேபோன்று மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். சமையல் எண்ணெய்யில் இருந்து மசாலா பவுடர்கள் வரை என் கடையில் எந்தப் பொருட்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் கவர்களைப் பயன்படுத்துவதில்லை. துணிப்பைகளை எடுத்து வரும் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களில் 2 விழுக்காடு தள்ளுபடியும் செய்கிறேன். கண்ணாடி பாத்திரம் மற்றும் காகிதப் பைகளை விற்பனை செய்கிறேன்.

இதற்கு முன்பணமாக சிறு தொகையைப் பெற்றுக் கொள்கிறேன். அடுத்த முறை வாடிக்கையாளர்கள் கடைக்கு வரும்போது இந்தத் தொகையைத் திருப்பிக் கொடுக்கிறேன். எனது கடைக்கு தினமும் 300 வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். இந்த முயற்சியை பள்ளிக் குழந்தைகளிடமும் கொண்டு சென்று, பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை வாழ அவர்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளேன்.

திடப்பொருட்களை துணி மற்றும் காகிதப் பைகளிலும், எண்ணெய், ஷாம்பு போன்றவைகளை கண்ணாடி கொள்கலனிலும் விற்பனை செய்கிறேன். இந்தக் கடையைத் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்ததின் மூலம், 12.5 லட்சம் பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தில் கொட்டப்படாமல் பாதுகாத்துள்ளேன்'' என்றார்.


Next Story