அச்சுக்கலையின் வரலாறு..!


அச்சுக்கலையின் வரலாறு..!
x

நீங்கள் புத்தகங்கள் வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஜெர்மன் அறிஞர் ஜோஹன்னஸ் குட்டன்பர்க்தான் (JohannesGutenberg) காரணம்.

குட்டன்பர்க் அறிமுகப் படுத்திய 'இயங்கும் எழுத்துரு' (Movable type) என்ற இந்தத் தொழில்நுட்பம் துரிதமாக வளர்ந்தது. மேலும் பல நவீன மாற்றங் களோடு அவர் தயாரித்த அச்சு இயந்திரம் அச்சுத் துறையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது.

ஆம், இவர் உருவாக்கிய நவீன அச்சுக்கலை என்னும் அடிப்படையால்தான் இன்று ஏராளமான நூல்களை விரைவாகவும், துல்லியமாகவும் அச்சடிக்க முடிகிறது.

ஜெர்மனியின் மெயின்ஸ் என்ற ஊரில் 1398-ம் ஆண்டு பிறந்தார் குட்டன்பர்க். அவரின் தந்தை ஒரு பொற்கொல்லர். பல உலோகங்களைக் கலந்து பிரத்யேகமான உலோகத்தில் அரசாங்கத்துக்கு நாணயங்கள் செய்து கொடுப்பதில் குட்டன்பர்க்கின் குடும்பம் ஈடுபட்டு வந்தது. ஆனால், சிறுவன் குட்டன்பர்க்கின் ஆர்வம் மட்டும் அச்சுக்கலை பக்கம் திரும்பியது.

அவர் காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உலகம் காகிதத்தையும், அச்சுக்கலையையும் அறிந்திருந்தது. காகிதத்தின் தாய்நாடான சீனாவில் கி.பி.868-ம் ஆண்டே புத்தகம் அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் ஒரு காகிதத்தில் அச்சடிக்க வேண்டுமானால், அந்தக் காகிதத்தின் அளவுக்கு ரப்பர் ஸ்டாம்ப் போல ஒரு 'களிமண் அச்சு' உருவாக்க வேண்டும். அந்த களிமண் அச்சு வெகு சீக்கிரம் உடைந்து விடவோ, தேய்ந்துவிடவோ கூடியது. இதனால் மிக குறைந்த பிரதிகள்தான் அச்சடிக்க முடிந்தது. அதுவும் ஒவ்வொரு பக்கத்துக்கும் களி மண் அச்சு செய்வது கடினமாக இருந்தது.

குட்டன்பர்க் இந்தப் பிரச்சினைக்கு தனது உலோகத் தொழில் மூலமாகவே தீர்வு கண்டார். அதாவது, ஒவ்வொரு எழுத்தும் தனித்தனி சிறு உலோகக் குச்சிகளாக உருவாக்கப்படும். ஒரு வார்த்தையில் அது எந்த வரிசையில் இடம் பெற வேண்டுமோ அந்த இடத்தில் அதனை வைத்து அச்சுக் கோர்த்து, ஒரு பக்கத்தில் வர வேண்டிய அனைத்து வரிகளையும் எளிதாக உருவாக்கிவிடலாம்.




குட்டன்பர்க் அறிமுகப்படுத்திய 'இயங்கும் எழுத்துரு' (Movable type) என்ற இந்தத் தொழில்நுட்பம் துரிதமாக வளர்ந்தது. மேலும் பல நவீன மாற்றங்களோடு அவர் தயாரித்த அச்சு இயந்திரம் அச்சுத் துறையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது.

அறிவியல் திறமை அளவுக்கு குட்டன்பர்க் வணிகத்தில் திறமை வாய்ந்தவராக இருக்கவில்லை. அதனால் தமது கண்டுபிடிப்பைக் கொண்டு பணம் சம்பாதிக்கவும் தெரியவில்லை.

மற்றவர்கள் தொடுத்த வழக்குகளால் நிலை குலைந்த அவர் தமது அச்சு இயந்திரத்தையே இழக்க நேரிட்டது. 1468-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி தனது 70-வது வயதில் குட்டன்பர்க் மரணமடைந்தார்.

குட்டன்பர்க்கின் சாதனைகளைத் தவிர, அவரின் சிறு வயது வாழ்க்கை எதுவும் தெளிவாக இல்லை என்கின்றனர், வரலாற்று ஆசிரியர்கள். அதற்குக் காரணம் அவர் தன்னைப் பற்றி எழுதிக் கொள்ளாததுதான். ஆனால் பிற்காலத்தில் வந்தவர்கள் பலரின் வரலாறுகளும் இன்று வரை பாதுகாக்கப்படுவது குட்டன்பர்க்கின் அச்சு இயந்திரத்தால்தான்...!


Next Story