பாகுபலியா? பொன்னியின் செல்வனா? வேண்டாமே! ஒப்பீடு...


பாகுபலியா? பொன்னியின் செல்வனா? வேண்டாமே! ஒப்பீடு...
x

ஒவ்வொன்றும் ஒரு அழகு. எது அழகு-? என்பது பார்ப்பவரின் ரசனையை பொறுத்தது.

நேராக பயணிக்கும் நதியை விட வளைந்து, நெளிந்து செல்லும் நதி அழகு. சீரான புல்வெளியை விட ஏற்ற இறக்கங்களுடன் கூடிய புல்வெளி அழகு.

சிலர் இளமையைவிட முதுமையில் அழகாக இருப்பார்கள். சாந்தி வழியில் சென்ற அண்ணல் காந்தியும், கருணையே வடிவான அன்னை தெரசாவும் அதற்கு சான்று.

தொலைக்காட்சி பெட்டியில், ''தங்கத்தாமரை மகளே வா அருகே!'' என அரவிந்தசாமி, அருவியில் குளித்து கும்மாளமிடும் கஜோலை வர்ணித்துக் கொண்டிருக்க, டி.வி.யில் பாட்டை ரசித்தபடி கணவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நடிகையின் எழிலில் மயங்கிய அவன், ''என்ன ஒரு கவர்ச்சி! அழகு! பொம்பளைன்ன இப்படில்லா இருக்கணும், ஊர்லயும் இருக்காளுகள குதிருக்கு புடவை கட்டின மாதிரி'' என்றபடி, எதிரே பரிமாறிக் கொண்டிருந்த மனைவியை கடைக்கண்ணால் பார்த்தான்.

பாவம்! தூங்கிக்கொண்டிருந்த புலியை சீண்டினால் அது சும்மா இருக்குமா?

''ஆம்பளைன்ன அரவிந்தசாமி மாதிரி சும்மா நச்சுனு இருக்கணும். என்ன கலரு! என்ன அழகு! என்ன கம்பீரம்! ஹூம்... நமக்குந்தான் வாச்சிருக்குதே கரிப்பானை கலர்ல, ஊதுபத்திக்கு பேண்ட் போட்ட மாதிரி'' என்று பந்தை அவள் வேகமாக திருப்பி அடிக்க, அவன் முகத்தில் அசடு வழிந்தது. ''சரி...சரி... இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடு'' என்று நைசாக பேச்சை மாற்றினான்.

இப்படித்தான் சிலர், யாரையோ மட்டம்தட்டுவதாக நினைத்து தவறான ஒப்பீடுகளை செய்து, சொந்த காசிலேயே சூனியம் வைத்துக்கொள்வார்கள்.

ஒப்பீடு என்பது ஒரு தவறான பார்வை, அணுகுமுறை. ஒரு படைப்பு எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ரசிக்கவேண்டும். அதில் உள்ள நிறைகுறைகளை விமர்சிக்கலாமே தவிர, அதை மற்றொன்றுடன் ஒப்பிடுவது அவ்வளவு சரியாக இருக்காது.

ராமாயணமும், மகாபாரதமும் மாபெரும் இதிகாசங்கள். இதிகாசங்கள் என்பதற்காக இரண்டையும் ஒப்பிட்டு மதிப்பெண் வழங்க முடியுமா? ஒவ்வொன்றின் தளமும் வெவ்வேறான போதிலும் இரண்டுமே தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைகளையே போதிக்கின்றன.

சில விஷயங்கள் ஒப்பீடுக்கு அப்பாற்பட்டவை. தாய் காட்டும் அன்பில் கனிவு இருக்கும்; தந்தையின் அன்பில் ஒரு கண்டிப்பு இருக்கும். இரண்டுமே ஒன்றுக்கொன்று குறைந்தது அல்ல என்பதால், இந்த அன்பை ஒப்பிடுவது சரியாக இருக்காது.

ஆனால் எல்லா இடங்களிலுமே ஒப்பீடு என்பது இருக்கத்தான்செய்கிறது. குறிப்பாக சினிமா துறையில் இந்த 'ஒப்பீடு மனப்பாங்கு' தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சமீப காலமாக இந்த ஒப்பீடு வியாதி மிகவும் அதிகரித்து உள்ளது. சிலர், படம் வெளியான உடனேயே அதை தங்களுக்கு வசதியான படங்களுடனெல்லாம் இஷ்டம் போல் ஒப்பிட்டு கிழித்து தொங்க விடுகிறார்கள்.

சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான 'பொன்னியின் செல்வன்' அப்படிப்பட்ட ஒரு ஒப்பீடுக்கு உள்ளாகி, பலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, சிலருக்கு ரகசிய சந்தோஷத்தையும் அளித்து இருக்கிறது. ராஜமவுலியின் 'பாகுபலி'யையும், பொன்னியின் செல்வனையும் ஒப்பிட்டு அதைப்போல் இது இல்லை; இதைப்போல் அது இல்லை என்று வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கிறார்கள்.

படம் எடுத்த இருவரும், அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார்கள். ஆனால் விமர்சகர்களின் இம்சைதான் தாங்க முடியவில்லை.

முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். பாகுபலியின் கதைக்களம் வேறு; பொன்னியின் செல்வன் கதைக்களம் வேறு.

பாகுபலி கற்பனை கதை. பணம் இருந்தால் அங்கு எவ்வளவு வேண்டுமானாலும் பிரமாண்டத்தை கொண்டு வரலாம்; சாகசங்களையும், அழகியல் காட்சிகளையும் காட்டலாம்.

ஆனால் பொன்னியின்செல்வன் அப்படி அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றை மையமாக வைத்து அமரர் கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி 5 பாகங்களாக எழுதிய மிகப்பெரிய சரித்திர நாவலை தழுவி உருவாக்கப்பட்ட படம். நாவலில் ஓரளவு கற்பனையும், கற்பனை பாத்திரங்களும் இருக்கலாம். எனவே அளவுக்கு மீறிய கற்பனைக்கு இந்த படத்தில் இடம் கிடையாது. அன்றைய காலகட்டத்தில் என்னென்ன வசதிகள், வாழ்க்கை முறை இருந்திருக்குமோ அதன் அடிப்படையில்தான் காட்சிகளை வடிவமைக்க முடியும். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதால் ரசிகர்களை கவர்வதற்காக கொஞ்சம் அழகுபடுத்தலாம், பிரமாண்டப்படுத்தலாம். அதைவிடுத்து அளவுக்கு மீறிய சாகசங்களையோ, பிரமாண்டங்களையோ காட்டினால், ''அந்த காலத்துல இப்படியெல்லாம் நடந்திருக்கும்னு நினைக்கிறே; இது ரொம்ப ஓவர்ப்பா'' என்று கேலி பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

கற்பனை கதையான பாகுபலியை படமாக்குவதில் ராஜமவுலிக்கு இருந்த சுதந்திரம், சரித்திர கதையான பொன்னியின் செல்வனை படமாக்கிய மணிரத்னத்துக்கு கிடையாது. அவர் அடக்கியே வாசிக்கவேண்டும். கதையின் தன்மையில் இருந்து மீறி காட்சிகளை மிகைப்படுத்த முடியாது. பொன்னியின் செல்வன் களம் வேறு என்பதால் அதை பாகுபலி போன்ற பிற படங்களுடன் ஒப்பிடமுடியாது என்று மணிரத்னம் ஏற்கனவே கூறி இருக்கிறார்.

ஒரு காலத்தில் சினிமா, கதையை மட்டுமே நம்பி இருந்தது. ஒரு கதையை வெற்றிப்படமாக மாற்ற இயக்குனர்களுக்கு நல்ல நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதன்பிறகு நடிகர்களின் செல்வாக்கு உயர, அவர்களுக்கு ஏற்ப கதையை உருவாக்கும் பாணி உருவானது. இதனால் வர்த்தக நோக்கம் அதிகரித்து, படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள், சாகசங்கள் அதிக அளவில் இடம்பெற தொடங்கின.

இப்போது காலம் ரொம்ப மாறிவிட்டது. லட்சங்களுக்குள் இருந்த சினிமா பட்ஜெட் பின்னர் கோடியை தொட்டு, நூறு கோடி, இருநூறு கோடி என்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது. மாநிலத்துக்குள் மட்டுமே இருந்த பிராந்திய மொழி படங்களின் வியாபார எல்லை இந்தியாவை கடந்து சர்வதேச அளவில் விரிந்துவிட்டது. இதனால் சினிமா தயாரிப்பு முறை மாறி வியாபார இலக்கை எட்ட வேண்டிய கட்டாய நிலை வந்துவிட்டது. கதை, இயக்குனர், நடிகர்-நடிகைகளோடு தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெரும்பாலான படங்கள் கிராபிக்ஸ், காட்சி விளைவுகள் எனப்படும் வி.எப்.எக்ஸ். (விஷூவல் எபெக்ட்ஸ்) தொழில்நுட்பங்களை நம்பியே உருவாக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட 'ஸ்டார் வார்ஸ்', 'அவெஞ்சர்ஸ்', 'ஜூராசிக் பார்க்', 'அவதார்' போன்ற படங்கள் பல்வேறு நாடுகளிலும் வசூலை வாரி குவித்துள்ளன.

இந்தியாவில் வி.எப்.எக்ஸ்., கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களை மிகவும் சிறப்பாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெற்றிகரமான முதல் படம் எது என்றால், அது பாகுபலிதான். இந்த படத்தின் மகத்தான வெற்றியில் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. கதாநாயகன் பிரபாஸ் மலையில் தாவி ஏறுவது, அருவியில் குதிப்பது, யானையின் துதிக்கையில் அனாயாசமாக ஏறுவது, வில்லனுடன் மோதுவது என்று படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பூட்டி ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும். அத்தனை அற்புதங்களும் வி.எப்.எஸ்., கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் மூலமே சாத்தியமாகி இருக்கின்றன.

மூர்க்கத்துடன் பாய்ந்து வரும் ராட்சச எருதை வில்லன் ராணா பாய்ந்து சென்று அடக்கும் பிரமாண்ட காட்சி, இதற்கு முன் எந்த படத்திலும் பார்த்திராதது. அந்த எருதின் உடல் அமைப்பு மற்றும் ஓடி வரும் முறையில் இருந்தே, அதிலுள்ள கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தின் பங்கை நன்றாக அறிந்துகொள்ள முடியும். என்றாலும் படம் பிடித்த விதம், அதன் பின்னணியில் உள்ள பிரமாண்டம் ரசிகர்களை காட்சியுடன் ஒன்றச்செய்து ரசிக்க வைத்தது.

சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இரு பாகங்களாக தயாரிக்கப்பட்ட பாகுபலியின் பிரமாண்டத்துக்கும், வெற்றிக்கும் தொழில்நுட்பம் முக்கிய காரணமாக அமைந்தது. இயக்குனரும் தொழில்நுட்ப வசதிகளை புத்திசாலித்தனமாக, திறமையாக பயன்படுத்தி இருந்தார்.

பொன்னியின் செல்வனின் கதை நடந்த வரலாறு என்பதால், இயக்குனர் ஓரளவு யாதார்த்தத்தை மீறாமல் அழகியலுடன் காட்சிகளை உருவாக்கி இருக்கிறார். கலைஞர்களும் தங்கள் பாத்திரங்களை நன்றாகவே செய்து இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். நடிக்க விரும்பிய வந்தியதேவன் பாத்திரத்தில் கார்த்தி கலக்கி இருக்கிறார். என்றாலும் சில காட்சிகளை பார்க்கும் போது, அவருக்குள் இருந்து 'பருத்தி வீரன்' இன்னும் வெளியேறவில்லையோ என்று தோன்றுகிறது.

இதேபோல் ஆதித்த கரிகாலனும் (விக்ரம்) இன்னும் ராவணன் பிடியில் இருந்து மீளவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. காதலி நந்தினி கைநழுவி போனதால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும், விரக்தியையும் இவ்வளவு ஆவேசத்துடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த வரலாற்று நாயகன் வெளிப்படுத்தி இருப்பானா?

பொன்னியின் செல்வனான அருள்மொழி வர்மனை இன்னும் கொஞ்சம் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தி இருக்கலாம். 2-வது பாகத்தில்தான் இவரிடம் நிறைய எதிர்பார்க்க முடியும்.

உள்ளத்தில் சதியுடனும், முகத்தில் இறுக்கத்துடனும் சோழ அரியணைக்கு எதிராக காய் நகர்த்தும் பெரிய பழுவேட்டரையரின் (சரத்குமார்) கம்பீரம் ரசிக்க வைக்கிறது.

நகைச்சுவையில் கலக்கும் ஆழ்வார்க்கடியான் நம்பி (ஜெயராம்) கே.ஏ.தங்கவேலுவை நினைவூட்டுகிறார். ஜெயராம் தண்ணீரை போன்றவர். எந்த பாத்திரத்தை ஏற்றாலும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அற்புதமான கலைஞர்.

'சாமி'யில் 'மாமி'யாக வந்த திரிஷா, உதட்டில் புன்னகையுடனும், அலட்சிய பார்வையுடனும் இளவரசியின் கெத்தை காட்டி ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு 'குந்தவை'த்து இருக்கிறார். விரக்தி, இழப்பு, தோல்வி, ஆற்றாமை, பழிவாங்கும் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தி நந்தினி பாத்திரத்தில் ஐக்கியமாகிவிட்டார் ஐஸ்வர்யாராய். அழகிகளான குந்தவையும், நந்தினியும் சந்திக்கும் காட்சிகளை இயக்குனர் கவித்துவமாக்கி இருக்கிறார்.

பார்த்திபன் (சின்ன பழுவேட்டரையர்), பிரகாஷ்ராஜ் (சுந்தரசோழன்) பிரபு,விக்ரம் பிரபு,ஐஸ்வர்யா லட்சுமி என யாரும் குறைவைக்கவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் ஒரு இசை ராஜாங்கமே நடத்தி, படத்துக்கு உயிரோட்டம் அளித்து இருக்கிறார்.

சரித்திர படங்களுக்கு வசன உச்சரிப்பும், உடல்மொழியும் ரொம்ப முக்கியம். அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

ஒரு நாவலை படித்து ரசிப்பதற்கும், படமாக பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நாவலை படிக்கும் போது அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் உணர்வுகள், இடங்கள் போன்றவற்றை ஒவ்வொருவரும் உள்வாங்கி, தங்கள் கற்பனைக்கு ஏற்ப அதில் லயித்து இருப்பார்கள். ஆனால் பல்வேறு மனநிலை, ரசனையுள்ள ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் (தியேட்டர்) கூட வைத்து, எழுத்து வடிவில் உள்ள ஒரு நாவலை காட்சி வடிவமாக்கி அவர்களை திருப்திபடுத்துவது என்பது மிகவும் சவாலான பணி ஆகும்.

ஏராளமான நடிகர்-நடிகைகள், ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள், யானைகள், குதிரைகள், பிரமாண்ட 'செட்'டுகள் என சரித்திர படம் எடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதை மணிரத்னம் திறம்பட செய்து இருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

மொத்தத்தில், பாகுபலியைப் போல் பொன்னியின் செல்வனும் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக அமைந்து இருக்கிறது. மேலும் இது சோழர்களின் வரலாற்றை மையமாக கொண்ட படம் என்பதில் தமிழர்களுக்கு கூடுதல் பெருமை. பொன்னியின் செல்வன் மூலம் தமிழனின் பெருமை உலக நாடுகளை சென்று அடைந்திருக்கிறது.

சாதனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. காய்த்த மரம்தானே கல்லடி படும்.

பாகுபலிக்கு கிடைத்த மகத்தான வெற்றி சரித்திர படங்களுக்கான கதவை மீண்டும் திறந்து விட்டுள்ளது. தமிழில் ராஜராஜசோழன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற சரித்திர படங்கள் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. சமூக படங்கள் கோலோச்சும் இந்த காலகட்டத்தில் சரித்திர படங்களை எடுக்கும் முயற்சி விஷப்பரீட்சைதான். எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் போன்றோர் முயற்சித்து கைகூடாமல் போன பொன்னியின் செல்வன், இப்போது மணிரத்னம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

நறுமணம் மிக்க மலர்களை எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு ரோஜா பிடிக்கும்; சிலருக்கு மயக்கும் மல்லிகையின் வாசம் பிடிக்கும். அதற்காக ரோஜாதான் உயர்ந்தது; மல்லிகைதான் சிறந்தது என்று அடித்துக்கொண்டு உருளலாமா?

இனிப்பு சாப்பிடுபவர்களுக்கு லட்டும் பிடிக்கும், ஜாங்கிரியும் பிடிக்கும். சிலருக்கு இதுவும், சிலருக்கு அதுவும் அதிகமாக பிடிக்கும். ஒன்றை விரும்பி சாப்பிடுபவர்கள் மற்றொன்றை வெறுக்கவா முடியும்? இரண்டுமே சுவைதானே!

ஒரு படத்தின் உருவாக்கத்தில் கோடிக்கணக்கான செலவும், ஆயிரக்கணக்கான கலைஞர்கள், தொழிலாளர்களின் உழைப்பும் உள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல், மனம்போன போக்கில் விமர்சிப்பது, ஒன்றை உயர்த்திப்பிடித்து மற்றொன்றை தாழ்த்துவது அவர்களுடைய வியர்வையை அவமதிப்பது போலாகிவிடும்.

எந்தவித சார்பு நிலைக்கும் ஆளாகாமல், படங்களை பார்த்து ரசித்து நடுநிலையோடு நிறைகுறைகளை பகிர்ந்து கொள்வதே நாகரிகமான, சிறந்த விமர்சனமாக இருக்கமுடியும்.

''கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இது தருேமா? இந்த சுகம் அது தருேமா?'' என்ற கவியரசு கண்ணதாசனின் வரிதான் நினைவுக்கு வருகிறது.

பாகுபலியை பாகுபலியாக பார்ப்போம்; பொன்னியின் செல்வனை பொன்னியின் செல்வனாக பார்ப்போம். அப்போதுதான் இரு படங்களின் செழுமையையும் நம்மால் முழுமையாக ரசித்து அனுபவிக்கமுடியும்.

வசூலில் சாதனை

இதுவரை எந்த தமிழ்ப் படமும் செய்யாத வசூல் சாதனையை பொன்னியின்செல்வன் நிகழ்த்தி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் 2 பாகங்களாக எடுக்கப்பட்ட இதன் தயாரிப்பு செலவு ரூ.500 கோடி என்று சொல்லப்படுகிறது. செப்டம்பர் 30-ந் தேதி வெளியான முதல் பாகம் தமிழகம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இதுவரை ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்து உள்ளது.

இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

'விஷூவல் எபெக்ட்ஸ்' தொழில்நுட்பம்


சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. கதாசிரியர்களையும், கதை இலாகாவையும் தேடவேண்டிய நிலை உள்ளது. 'கேங்ஸ்டர்' படங்களே அதிகம் வருகின்றன. அடிதடி, வெட்டுக்குத்து என்று திரை முழுவதும் ஒரே ரத்த வாடை. கதாநாயகன் ஸ்டைலாக திரும்பி இரு கைகளையும் ஆவேசமாக வீசினால், அந்த அடி தாங்காமல் அஜானுபாகுவான வில்லன்கள் தூக்கி வீசப்பட்டு ரத்தம் கக்கி நாலாபுறமும் சிதறி விழுகிறார்கள். இது ஒரு பக்கம் தமாஷாக இருந்தாலும், ரசிக்கவும் முடிகிறது. தொழில்நுட்பங்கள் மூலமே இத்தகைய சாகச காட்சிகள் சாத்தியமாகின்றன.

கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பங்கள் மூலம் காட்சிகளை பிரமாண்டமாகவும், அழகாகவும் காட்டி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறார்கள். இல்லாத ஒன்றையும் காட்சிப்படுத்த முடிகிறது. இயக்குனர் விரும்பிய இடங்களையும், அழகையும் காட்சிகளில் கொண்டு வர முடிகிறது.

முதலில் 'கிரீன்மேட்' முறையில் காட்சியை படமாக்கிவிட்டு பின்னர், தாங்கள் கற்பனையாக உருவாக்கிய அல்லது, படம் பிடித்த தேவையான வேறொரு காட்சியுடன் அதை இணைத்து விடுகிறார்கள். பாகுபலியில் பிரமாண்ட அருவியில் தமன்னா ஒய்யாரமாக ஓடி வரும் காட்சி படமாக்கப்பட்டது இப்படித்தான்.

பாகுபலியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பது தொழில்நுட்பம்தான். அதில் ஏராளமான காட்சிகள் வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு உள்ளன. ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படமும் அப்படித்தான்.

முதன் முதலில் 1895-ம் ஆண்டில் வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆல்பர்ட் கிளர்க் என்பவர், ஒரு பெண்ணின் தலையை வெட்டும் காட்சியை தத்ரூபமாக படமாக்கினார்.

தமிழில் 'எந்திரன்', செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்', 'மதராசபட்டினம்', 'மாற்றான்', '7-ம் அறிவு', 'விஸ்வரூபம்', 'புலி' உள்ளிட்ட பல படங்களில் வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை ஸ்டூடியோவில் கதாநாயகி பணியாரம் சுடும் காட்சியை படமாக்கிவிட்டு தொழில்நுட்ப உதவியுடன், அவர் அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகே அமர்ந்து சுடுவது போல் காட்டி விடலாம்.

பெரும் கூட்டம், குண்டுவெடிப்பு, கட்டிடங்கள் இடிந்து விழுவது, பெரிய தீ விபத்து, வெள்ளம், சாகசங்கள் போன்ற காட்சிகள் வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தின் மூலம் பாடமாக்கப்படுகின்றன.

இப்படியே போனால், சினிமாவிலும் 'ஒர்க் பிரம் ஹோம்' (வீட்டில் இருந்தபடியே வேலை) கலாசாரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நடிகர்-நடிகைகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கேமரா முன் நடிப்பார்கள். பின்னர் தொழில்நுட்ப கலைஞர்கள், தேவையான காட்சிகளுடன் அவர்களை இணைத்து விடுவார்கள்.

நிஜத்தில் சாத்தியம் இல்லாத ஒன்றை திரையில் சாத்தியமாக்க தொழில்நுட்பம் உதவுகிறது. எனவே எதிர்காலத்தில் சினிமாவை தொழில்நுட்பம்தான் ஆளப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியே கொஞ்சம் கதையையும் கவனித்தால் நல்லது.


Next Story