'அதன்பிறகு பட்டாசை தொட்டதே இல்லை' - நடிகை ரேகா


அதன்பிறகு பட்டாசை தொட்டதே இல்லை - நடிகை ரேகா
x

நடிகை ரேகா தீபாவளி குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

எனக்கு சின்ன வயதில் பக்கத்தில் பட்டாசு வெடித்து பார்ப்பது, வானத்தில் வெடித்து பார்ப்பது எல்லாம் ரொம்ப பிடிக்கும். வெடிகள் வாங்கி வெடிக்க மாட்டோம். சங்கு சக்கரம், மத்தாப்பு இந்த மாதிரிதான் வாங்கிக் கொடுப்பார்கள். 'ஜிகிஜிகு'னு போகும் ரெயில் வெடியும் பிடிக்கும். சத்தமாக வெடிக்கும் பெரிய பட்டாசுகள் என்றால் சின்ன வயதில் இருந்தே எனக்கு பயம். இந்த தெருவில் இருந்து அடுத்த தெருவரை சரவெடியை நீளமாக போட்டு வெடிப்பார்கள். அப்போது பக்கத்தில் நிற்காமல் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து 'படபட' வென்று வெடிப்பதை பார்ப்பேன்.

தீபாவளிக்கு புத்தாடைகள் எடுத்து கொடுப்பார்கள். அப்போதெல்லாம் பண்டிகையின்போதுதான் புதிய ஆடைகள் வாங்கி கொடுப்பது உண்டு. எல்லா மத பண்டிகைகளையும் கொண்டாடுவோம். அம்மா அதிரசம், லட்டு எல்லாம் செய்வார்கள்.

வளர்ந்தபின் ஒரு சம்பவத்துக்கு பிறகு பட்டாசு வெடிப்பதை விட்டு விட்டேன். ஒருநாள் இரவு வீட்டில் நிறைய பட்டாசு வாங்கி வைத்து காலையில் வெடிக்கலாம் என்று இருந்தோம். ஆனால் எனது மகள் அப்போதே வெடிக்க வேண்டும் என்று அடம்பிடித்ததால் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று சங்கு சக்கரம் விட்டோம். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்ததால் எனது வலது கையில் பட்டு சதை பிய்ந்துவிட்டது. இதனால் ஒன்றரை மாதம் நரக வேதனையை அனுபவித்தேன். அதன் பிறகு நான் பட்டாசை கையில் தொட்டதே இல்லை.


Next Story