திவால் நிலையில் தத்தளிக்கும் பாகிஸ்தான்


திவால் நிலையில் தத்தளிக்கும் பாகிஸ்தான்
x

அடியோடு வற்றிவிட்ட அன்னியச் செலாவணி இருப்பு, படுபாதாளத்தில் பண மதிப்பு, விண்ணை முட்டும் விலைவாசி, கண்ணை கட்டும் அரசின் கடன் நெருக்கடி, அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள், அரசியல் சூறாவளிகள் என்று இன்று பலமுனை பிரச்சினைகளில் பரிதவித்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

மின் வினியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் தேசமும் கடந்த மாதத்தில் 23-ந்தேதியன்று இருளில் மூழ்கியது. பாகிஸ்தானின் இன்றைய நிலையை அப்படியே பிரதிபலிப்பதாக இந்த 22 மணிநேர மின்தடை இருந்தது. அடியோடு வற்றிவிட்ட அன்னியச் செலாவணி இருப்பு, படுபாதாளத்தில் பண மதிப்பு, விண்ணை முட்டும் விலைவாசி, கண்ணை கட்டும் அரசின் கடன் நெருக்கடி, அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள், அரசியல் சூறாவளிகள் என்று இன்று பலமுனை பிரச்சினைகளில் பரிதவித்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். திவால் திசையை நோக்கி அதிவேகமாக சரிந்துகொண்டிருக்கும் தேசத்தை எப்படி தூக்கி நிறுத்துவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் ஆட்சியாளர்கள். மக்களோ போராடவும் திராணியின்றி துவண்டுபோயிருக்கிறார்கள்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.250, டீசல் விலை லிட்டருக்கு ரூ.263 ஆகியிருக்கிறது. வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஒரே மூச்சில் ரூ.703 உயர்த்தப்பட்டு ரூ.3,115-ஐ தொட்டிருக்கிறது.

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு ரூ.270 என பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிறது. அரசின் கடன் அளவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 77.8 சதவீதமாக எகிறியிருக்கிறது. பணவீக்கம் 30 சதவீதமாக பிதுங்கி வழிவதால், உணவுப்பொருட்களின் விலை கொதிக்கிறது. கோதுமை மாவு கிலோ ரூ.160, 1 லிட்டர் பால் ரூ.150, ஒரு டஜன் வாழைப்பழம் ரூ.120 என்று மலையேறும் உணவு விலைவாசி மலைப்பூட்டுகிறது. அரிசி, பருப்பு என அத்தியாவசியப் பொருட்கள் எல்லாமே ஓராண்டில் 50 சதவீதம் விலை உயர்ந்திருக்கின்றன. இவற்றில் அதிர்வேட்டு அதிரடி, வெங்காய விலைதான். ஒரு கிலோ வெங்காயம் இப்போது ரூ.280-க்கு விற்கிறது. இது 501 சதவீத உயர்வு!

அன்னியச் செலாவணி இருப்பு 3.1 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளதால், வெறும் 3 வாரங்களுக்கு மட்டுமே இறக்குமதிக்கு தாக்குப்பிடிக்க முடியும் என்ற சூழல். தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட, மொத்தம் மொத்தமாக பலர் வேலையிழந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நடுத்தர மக்களே நாட்களை ஓட்டினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்ட சூழலில், அடித்தட்டு மக்களின் அவதியை சொல்லவே வேண்டாம். மானிய விலையில் வழங்கப்படும் உணவுப்பொருட்களை வாங்க அடிபிடி சண்டை போடவேண்டிய நிலை.

என்ன நடக்கிறது பாகிஸ்தானில்? ஏன் இந்த எக்குத்தப்பான நிலை?

இந்தியாவுக்கு ஒருநாள் முன்னதாக சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே தொழில் வளர்ச்சி, சுயசார்பில் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தவில்லை. அதிலும் ஆங்கிலேயர் வெளியேற்றத்துக்குப் பின்பு பாதி காலத்துக்கு நாட்டை தங்கள் நேரடிப் பிடியில் வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு, மக்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் அவசியம் இருக்கவில்லை. 'இந்திய பூச்சாண்டி' காட்டியே நிதி ஒதுக்கீட்டில் 'சிங்கப் பங்கை' சுவைத்து வந்தது, வருகிறது.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் அந்நாட்டு ராணுவத்தின் பங்கு பிரதானம். எது எப்படி இருந்தாலும், ஆண்டுக்காண்டு ராணுவ பட்ஜெட் அதிகரிக்கப்பட்டே வருகிறது. முதலாளியை மிஞ்சும் முரட்டு காவலாளியாக பாகிஸ்தான் ராணுவம் இருக்கிறது. 'எல்லா நாட்டுக்கும் ராணுவம் உண்டு. ராணுவத்துக்கு ஒரு நாடு உண்டு என்றால், அது பாகிஸ்தான்தான்' என்ற வேடிக்கையான கூற்று கூட உள்ளது.

பாகிஸ்தான் அதிகாரபீடத்தினருக்கும், தங்கள் நாட்டின் இருப்பிட முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா போன்ற வல்லரசுகளிடம் பணம் கறப்பதே வசதியாகவும், எளிதான வாய்ப்பாகவும் இருந்தது. அமெரிக்கா... அதில்லாவிட்டால் சீனா என்று தனது 'ஓசி' சவாரியை ஓட்டிக்கொண்டிருந்தது பாகிஸ்தான். மாறிய சர்வதேச சூழலும், உலக பொருளாதார மந்தநிலையும், ரஷியா-உக்ரைன் போரும் முந்தைய சுக பயணத்தை சோகமாக்கிவிட்டன.

'பெரியண்ணன்கள்' அளக்கும் படி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு நாடுகளின் ஆதரவு பிடி என்று நாட்களை நகர்த்திக்கொண்டிருந்த இந்நாடு இப்போது நட்டாற்றில் தவித்துக்கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானிய தேவை தீர்ந்துவிட்டதால் பாகிஸ்தானை அமெரிக்கா 'அம்போ' என விட்டுவிட்டது. செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும் இரண்டு காசு வரவை எதிர்பார்க்கும் சீனாவோ கொரோனா தாக்கம், எதிராக அணிதிரளும் பிற நாடுகள் என்று சொந்தச் சிக்கல்களில் சுழன்று கொண்டிருக்கிறது. 'சும்மா சும்மா பணத்தை அள்ளிவிட்டுக்கொண்டு இருக்க முடியாது' என்று சவுதி அரேபியாவும் சூசகமாக சொல்லிவிட்டது.

கடந்த ஆண்டு ஜூலை-செப்டம்பரில் பாகிஸ்தானை புரட்டிப்போட்ட வரலாறு காணாத மழை-வெள்ள பாதிப்பும், 'பனை மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதை' ஆனது.

இன்றையநிலையில் பாகிஸ்தானின் ஒரே இமாலய நம்பிக்கை, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம்தான். 23-வது முறையாக அதன் கதவுகளை பதற்றத்தோடு தட்டியிருக்கிறது பாகிஸ்தான்.

ஆனால் இந்த இக்கட்டான நேரத்திலும் பாகிஸ்தானின் கழுத்தில் ஈரத்துண்டை போட்டு இறுக்குகிறது சர்வதேச நாணய நிதியம். மானியங்களை வெட்டு, வரிவசூலில் கெடுபிடி காட்டு, கவர்ச்சித்திட்டங்களை குப்பைத்தொட்டியில் கொட்டு, அப்போதுதான் நீ எதிர்பார்க்கும் 6.5 பில்லியன் டாலரை கண்ணில் காட்ட முடியும் என்கிறது ஐ.எம்.எப்.

அதன் கெடுபிடி காரணமாகவே, டீசல், விலையை லிட்டருக்கு ரூ.35 அதிரடியாய் அதிகரித்தது பாகிஸ்தான் அரசு. சமையல் கியாஸ் 30 சதவீதம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மின் கட்டணத்தையும் எக்கச்சக்கமாக ஏற்றவேண்டிய நெருக்கடி நீடிக்கிறது.

பாகிஸ்தான் வந்த ஐ.எம்.எப். குழு காட்டும் கெடுபிடிகளில் கடுப்பான பிரதமர் ஷபாஸ் ஷெரீப், கற்பனைக்கு அப்பாற்பட்ட நிபந்தனைகளை அந்த அமைப்பு விதிப்பதாக குமுறுகிறார். ஆனாலும் அந்நாட்டுக்கு அந்த அமைப்பை விட்டால் வேறு கதியில்லை. ஐ.எம்.எப். ஆமோதிப்பாக தலையசைத்தால்தான், பாகிஸ்தானுக்கு பிற வெளிநாட்டு உதவிக்கரங்களும் நீளும். கடன்கள், அதற்கான வட்டி போன்றவற்றைச் சமாளிக்க மேலும் கடன்கள் என்ற விஷ சுழலுக்குள் வெகு காலமாக சிக்கித் தவிக்கிறது பாகிஸ்தான்.

சொந்த நாட்டில் நெருக்கடி முற்றும்போதெல்லாம், 'காஷ்மீரில் இந்தியாவின் அடாவடியைப் பாருங்கள்' என்று உணர்ச்சித் தீயை மூட்டி குளிர்காயும் இந்த நாட்டு அதிகார வர்க்கம், இப்போதுதான் இயல்பாக சிந்திப்பது போல தோன்றுகிறது. இந்தியாவுடன் நடந்த 3 போர்களில் பாடம் கற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் பிரதமர் வெள்ளைக்கொடி வீசுகிறார். பேச்சுவார்த்தைக்கு உண்மையாக தயாராக இருப்பதாக கூறுகிறார்.

ஆனால் அண்டை நாட்டில் நடக்கும் களேபரத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானுக்குள் நடக்கும் விஷயங்கள் குறித்து தான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்று சொல்லிவிட்டார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்.

இப்போதைக்கு ஏதோ மாயாஜாலம் நிகழும், கடவுள் கைகொடுப்பார் என்பது போல பாகிஸ்தானியர்களின் மனநிலை உள்ளது.'மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானை காப்பாற்றுவது கடவுள் பொறுப்பு' என்று அந்நாட்டு நிதி மந்திரி இஷாக் தர் வெளிப்படையாகவே கூறிவிட்டார். கடவுள் காப்பாற்றுகிறாரா என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சுடும் 'சாயா'... சுழலாத மின்விசிறி

பாகிஸ்தானியர்கள் 'சாயா' எனப்படும் டீயை விரும்பி அருந்துபவர்கள். உலகிலேயே அதிகமாக தேயிலையை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானியர்கள் 'டீ'க்காக செலவழித்த தொகை சுமார் ரூ.11 ஆயிரம் கோடி. இந்நிலையில் அந்நாட்டு திட்டமிடல் மந்திரி ஆஷான் இக்பால், 'நாம் கடன் வாங்கித்தான் தேயிலையை இறக்குமதி செய்கிறோம். எனவே நம் நாட்டவர்கள் தினமும் குடிக்கும் டீயில் ஒன்றிரண்டு கோப்பைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்' என்றார். உடனே பாகிஸ்தான் டீ பிரியர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். 'ஒவ்வொருவரும் தாம் பருகும் டீக்கு தாங்கள்தான் காசு கொடுக்கின்றனர். அரசாங்கம் அதை ஒன்றும் இலவசமாக வழங்கவில்லை. எனவே அரசாங்கத்தின் இந்த புத்திமதி தேவையில்லாதது' என்று சீறினார்கள். டீயை மட்டுமல்ல, வீடு, அலுவலகங்களில் மின்விசிறி இயக்குவதையும் தவிர்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அரசின் வேண்டுகோளால் அல்ல, சிக்கனம் கருதியே பலர் மின்விசிறிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள். இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் சிக்கனம் காட்டச் சொல்லும் அரசு, சமீபத்தில் 2 ஆயிரத்து 200 ஆடம்பர கார்கள் இறக்குமதிக்கு அனுமதி அளித்தது எப்படி என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்தியாவுக்கு நல்ல சேதி அல்ல

பங்காளி பாகிஸ்தான் பரிதவிப்பில் இருப்பது, இந்தியாவுக்கு நல்ல சேதி அல்ல. அந்நாடு பொருளாதாரரீதியாக பலவீனம் அடைந்திருப்பதால், பயங்கரவாத பாம்புக்கு பால் வார்ப்பது குறையும், இந்தியாவுக்கு எதிரான மறைமுகப் போர் வேகத்தைக் குறைக்கும் என்றாலும், பாகிஸ்தான் ஓர் அணு ஆயுத நாடு என்பதையும், பயங்கரவாதிகளின் சரணாலயம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அந்நாட்டில் நிலைமை தறிகெட்டுப் போய், தவறான கைகளில் ஆணு ஆயுதங்கள் சிக்கினால் முதல் ஆபத்து இந்தியாவுக்குத்தான். வாழவே முடியாத அளவுக்கு சூழல் மோசமானால், எதற்கும் தயாராய் ஒரு பெருங்கூட்டம் உருவாகும். அதை இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்திக்கொள்ளும். அகதிகளாய் அலை அலையாய் நம் நாட்டுக்குள் வரத்தொடங்கினால் பாதுகாப்பு பிரச்சினை உள்ளிட்டவை ஏற்படும். கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சீனாவின் முழு அடிமையாய் பாகிஸ்தான் மாறிவிட்டாலும் இந்தியாவுக்கு சிரமமே. எனவே, இலங்கை, மாலத்தீவு, நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகளுக்கு உதவியதுபோல மனிதாபிமான அடிப்படையிலாவது பாகிஸ்தானுக்கு உயிர் சுவாசம் வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு தலீபான்கள்... இரட்டைத் தலைவலிகள்

பாகிஸ்தானுக்கு இப்போது இரட்டை தலைவலியாய் இருப்பது, அண்டை வீடான ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலீபான்களும், தெக்ரீக்-இ-தலீபான்-இ-பாகிஸ்தான் என்ற உள்நாட்டு தலீபான்களும்தான். இந்த 2 தலீபான் அமைப்புகளும் தங்களுக்கு இடையில் தொடர்பு இல்லை என்று மறுத்தாலும், அடிப்படைவாதக் கருத்தியல் அடிப்படையில் ஒன்றுபட்டவை. ஆயுதப் போராட்டம் மூலம் பாகிஸ்தான் ஆட்சியை தூக்கியெறிய நினைக்கும் பாகிஸ்தானிய தலீபான், அந்நாட்டில் குலைநடுங்கவைக்கும் தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது. அதில் லேட்டஸ்ட், பெஷாவர் மசூதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட, 101 பேரை பலிகொண்ட மனித வெடிகுண்டு தாக்குதல். ஆப்கானிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் வலுவாக செயல்படும் பாகிஸ்தான் தலீபான்கள் இங்கே (பாகிஸ்தான்) தாக்கிவிட்டு, அங்கே (ஆப்கானிஸ்தான்) சென்று பதுங்கிக்கொள்கிறார்கள். இந்த பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தானுக்குள் அதிரடியாக புகுந்து அவர்களை அழிப்போம் என்று எச்சரிக்கிறது பாகிஸ்தான். பதிலுக்கு கோபமுகம் காட்டும் ஆப்கான் தலீபான்கள், 1971-ம் ஆண்டு வங்காளதேச போரில் இந்தியாவிடம் பெற்ற அவமானத்தை மறந்துவிட வேண்டாம், எங்களைச் சீண்டினால் மீண்டும் உங்களுக்கு அந்தக் கதி நேரும் என கடுமையாக கிண்டலடிக்கின்றனர். தங்களின் உளவு அமைப்பான 'இன்டர் சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ்' (ஐ.எஸ்.ஐ.) வளர்த்தெடுத்த முரட்டுக் கடாவான ஆப்கானிஸ்தான் தலீபான், மார்பில் முட்டுவது பாகிஸ்தானுக்கு கடும் வலியை ஏற்படுத்துகிறது.


Next Story