வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்: ஆதரவு இருக்கிறது... எதிர்ப்பும் கிளம்புகிறது...


வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்: ஆதரவு இருக்கிறது... எதிர்ப்பும் கிளம்புகிறது...
x

Image Courtesy: PTI

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து, விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவு இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.

சென்னை,

வங்கி சேவைகள்

பணப் பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கிச்சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கிச்சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது. மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது.

இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கேற்றாற்போல், வங்கிச் சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள்தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள் செயல்படும்

என்னதான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுகவேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்துவருகின்றன. அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகியிருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்டநாள் கோரிக்கை

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும் வருமாறு:-

வங்கி அதிகாரி ஜவஹர்:-

இது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கிறோம். பெரும்பாலான அதிகாரிகள், ஊழியர்கள் இதை வரவேற்பார்கள். வெளியில் இருந்து பார்க்கும்போது சனிக்கிழமையும் விடுமுறையா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த நாள் இழப்பை ஈடுகட்டும்வகையில் மற்ற நாட்களில் வேலை நேரத்தை அதிகரிக்க இருக்கின்றனர். அதன்படி, ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் வங்கி வேலை நேரம் அதிகரிக்கப்படும். தற்போது பெரும்பாலான வங்கிச் சேவைகள் ஆன்லைன் (டிஜிட்டல்) முறையில் கொண்டுவரப்பட்டுவிட்டன. மேலும் காசோலை பரிவர்த்தனை திட்டங்களையும் குறைக்கச் சொல்லியிருக்கிறார்கள். எனவே வங்கிச் சேவைகளை நேரடியாக வந்து பெறுவது என்பது இனி குறைவாகவே இருக்கும்.

தனியார் அலுவலகத்தில் வங்கி தொடர்பான பணிகளை கவனிக்கும் ராமஜெயம்:-

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் என்பது எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வளவுதான் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டாலும், காசோலை பரிமாற்றம் உள்பட சில சேவைகளுக்காக தினமும் வங்கிகளுக்கு சென்றுவரும் நிலை இருக்கிறது. ஏற்கனவே மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளில் விடுமுறை இருக்கிறது. அதுவே எங்களுக்கு கஷ்டமாக இருக்கும். இப்போது ஒட்டுமொத்தமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்றால், எங்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். எனவே வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் செயல்பட வேண்டும் அல்லது தற்போது இருக்கும் நடைமுறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

சரியாக இருக்காது

வங்கி அலுவலர் பிரேமா:-

தற்போது ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில்தான் வங்கிகளுக்கும் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை என்பதை கேட்டு இருக்கிறோம். பல ஆண்டுகளாக நாங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இது எங்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் வங்கி பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் ஒப்பந்தம் ஆகும். அதில்தான் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் பெருமாள்:-

எங்களைப் போன்று அதிகளவில் பணப் பரிமாற்றம் செய்பவர்களுக்கு நேரடி வங்கிச் சேவைதான் அவசியமாக இருக்கிறது. அதிலும் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில்தான் அதிகளவு பட்டுவாடா நடக்கும். ஏற்கனவே மாதத்தில் 2, 4-வது வார சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை. இதை ஒரு காரணமாகவே எங்களிடம் பொருட்கள் வாங்குபவர்கள் தெரிவிப்பார்கள். அப்படி இருக்கும்போது இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் என்பது சரியாக இருக்காது. எங்களுடையதைப் போன்ற தொழில்கள் மிகவும் பாதிக்கப்படும்.

பணத் தட்டுப்பாடு ஏற்படும்

தனியார் பள்ளி ஆசிரியை ஜோதி ஜெயகுரு:-

வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்பது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இது ஏ.டி.எம். மையங்கள் மீதும் தாக்கத்தை அதிகரிக்கும். தனியார் கம்பெனிகள், கல்வி நிலையங்களில் சம்பளம், ஓ.டி., எக்ஸ்டிரா அலவன்ஸ் போன்றவை வங்கிகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. இந்த புதிய நடவடிக்கையால் நிச்சயம் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். குறிப்பாக காசோலைகளை கையாளும்போது ஏற்படும் தாமதம் இன்னும் அதிகமாகும். வாரத்தில் ஒருநாள் ஓய்வே வங்கிகளுக்கு போதுமானது. வங்கி ஊழியர்களுக்கு சலுகை என்ற பெயரில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.

மொத்த வியாபாரி ஜி.டி.ராஜசேகரன்:-

இந்த புதிய நடைமுறை நிச்சயம் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சிறுவணிகர்களுக்கு பெரும் சிரமத்தை தரும். வெளிமாவட்டங்கள், வெளிமாநில வணிகத் தொடர்பு வங்கி சேவைகளின் மூலமே சாத்தியமாகி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் விடுமுறைக்கே முதலீட்டை முன்கூட்டியே செலுத்தவேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்படுகிறார்கள். இப்போது 2 நாட்கள் விடுமுறை என்றால் பணத் தட்டுப்பாடு ஏற்படும். தொழிலும் சற்று பாதிக்கப்படும். பழைய பாக்கியே சென்றடையாதநிலையில் புதிய தொகை கைமாறுவதில் தயக்கம் இருக்கும். எனவே இந்த நடைமுறை தேவையில்லாதது. பெரும் சிக்கலையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே இந்த புதிய நடைமுறை வேண்டாமே!




Next Story