ஜல்லிக்கட்டில் முதலிடம் வகிக்கும் புதுக்கோட்டை


ஜல்லிக்கட்டில் முதலிடம் வகிக்கும் புதுக்கோட்டை
x

தை மாத முதல் நாளில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆங்காங்கே நடத்தப்படுவது உண்டு. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது என்றாலும், ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனிச்சிறப்பு உள்ளது.

ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டை தொடங்குவதிலும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதிலும் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா நோய்பரவல் கட்டுப்பாட்டிற்குப் பிறகு, கடந்த 2022-ம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை, ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்திருந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 இடங்களில் ஜல்லிக்கட்டும், 12 இடங்களில் மஞ்சுவிரட்டும், 14 இடங்களில் வடமாடும் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் அதிகம். மேலும் மாடுபிடி வீரர்களும் அதிகம். இதுதவிர பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காளைகள் கொண்டுவரப்படும். பிற மாவட்ட மாடுபிடி வீரர்களும் ஆர்வமாக பங்கேற்பார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், வெளி மாவட்டங்களுக்கு சென்று ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து கவுரவிப்பாா்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளின் உரிமையாளர்களும் பிற மாவட்டங்களுக்கு சென்று காளைகளை பங்கேற்க வைப்பது உண்டு. இதில் புதுக்கோட்டை காளைகள் பரிசுகளை தட்டிச்சென்ற வரலாறும் உண்டு. மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் தண்ணி காட்டியது, களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது உள்ளிட்ட காளைகளை ஜல்லிக்கட்டு களத்தில் காணமுடியும். புதுக்கோட்டை மாவட்ட மாடுபிடி வீரர்களும் வெளி மாவட்டங்களுக்கு சென்று ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு பரிசினை அள்ளியிருக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டினை தொடர்ந்து இந்த ஆண்டும் அதிக இடங்களில் நடைபெற ஏற்பாடு நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டை பெருமைப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி அருகே வீரர் ஒருவர் காளையை அடக்குவது போன்று சிலை வைக்கப்பட்டது. இதேபோல் விராலிமலையிலும் சிலை வைக்கப்பட்டது. விராலிமலையில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி நடந்த ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story