மாறாத.. மறை–யாத.. பிறந்த நாள் வாழ்த்து..!


மாறாத.. மறை–யாத.. பிறந்த நாள் வாழ்த்து..!
x

இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்ல முதிய பருவத்தை எட்டுபவர்களும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்ல முதிய பருவத்தை எட்டுபவர்களும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள். பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்ப்பவர்கள் கூட குடும்பத்தினரின் விருப்பத்திற்கு செவி சாய்த்து, அந்த கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நாள் குடும்பத்தினரை மகிழ்விக்கும் நாளாக அமைவதை பார்த்து அகம் மகிழ்கிறார்கள். வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புகைப்படங்களை பகிர்ந்து 'ஹேப்பி பர்த் டே' என வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.

இன்று முதுமை பருவத்தை கடந்தவர்கள் விமரிசையாக பிறந்த நாளை கொண்டாடி இருப்பார்களா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். ஆனால் இன்று எந்த குழந்தையாக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் பிறந்த நாளை கொண்டாடியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எழுந்திருக்கிறது.

1980-க்கு பிறகு பிறந்த குழந்தைகளும் பிறந்தநாள் கொண்டாடினார்கள். எப்படி என்றால், யூனிபார்மில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும் அவர்கள், பிறந்த நாளன்று வண்ண ஆடை அணிந்து, சாக்லேட் கொண்டு சென்று சக மாணவர்களுக்கு பகிர்ந்தளித்து பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

2000-ம் ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த நாள் கொண்டாட்டம் முற்றிலும் மாறிவிட்டது. புத்தாடை அணிந்து கேக் வெட்டி, வசதி வாய்ப்பு இருந்தால் விருந்தினர்களை அழைத்து 'ஹேப்பி பர்த் டே டு யூ' என்று பாடி, ஒருவர் வாயில் மற்றவர் கேக் ஊட்டி, அதை வீடியோ அல்லது நேரலையில் ஒளிபரப்பி பிறந்தநாள் கொண்டாட்டத்தை அரங்கேற்றுகிறார்கள். இதற்கென ஒரு பெரிய தொகை பட்ஜெட் போட்டு செலவிடப்படுகிறது.

இது தேவைதானா என்பது கேள்வி அல்ல. இந்த கலாசார மாற்றம் நம்மை எங்கு அழைத்து செல்கிறது என்பது தான் கேள்வி. பிறந்த நாள் கொண்டாடவில்லை என்றால், பிள்ளைகள் படும் அவஸ்தையையும், அதை சமாளிக்க முடியாமல் இந்த தலைமுறை பெற்றோர் அனுபவிக்கும் மன வேதனையையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சின்ன குடும்பம், அளவான குழந்தைகள், பிள்ளைகளின் விருப்பங்கள் என்று காலம் மாறியதால், கொண்டாட்டமும் மாறி விட்டது.

குழந்தைகளுக்கு ஒரு வயது ஆனதும் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து, காது குத்தி, சாமி கும்பிட்டு, பிறந்த நாளை கொண்டாடிய காலம் இன்று மாறிக்கொண்டிருக்கிறது.

வயது ஆக ஆக பிறந்த நாள் கொண்டாட்டம் மெல்ல மெல்ல மறைந்து, மறந்து விடலாம். ஆனால் ஹேப்பி பர்த் டே டு யூ என்ற வாழ்த்து என்றும் மாறுவதில்லை, மறைவதில்லை.

-கிருஷ்ண ஜீவன், கும்பகோணம்.


Next Story