அக்டோபர் மாதத்தில் சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள்


அக்டோபர் மாதத்தில் சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள்
x

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் சுற்றிப்பார்க்க சிறந்த இடங்களின் பட்டியல் இது.

பருவமழை காலம் முடிவடைந்து குளிர்ச்சியான சீதோஷண நிலையின் தொடக்கமாக அக்டோபர் மாதம் அமைந்திருக்கும். திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படும். அந்த சமயத்தில் சுற்றுப்பயணத்தை தேர்ந்தெடுப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

கொல்கத்தா:

அக்டோபரில், கொல்கத்தா நகரம் முழுவதும் 10 நாள் துர்கா பூஜை விமரிசையாக நடைபெறும். அங்குள்ள குறுகிய சந்துகள் வழியாக செல்லும்போது, கற்பூரத்தின் வாசம் காற்றில் கலந்து சுவாசத்திற்குள் ஊருடுவுவதை உணரலாம். தெய்வீகம் சார்ந்த விஷயங்களை பார்க்கலாம், கேட்கலாம். சுற்றுலாவை விரும்புபவர்கள் அங்குள்ள கட்டிடக்கலை நுட்பங்கள், நினைவு சின்னங்களை கண்டு ரசிக்கலாம். பண்டையகாலத்தில் புழக்கத்தில் இருந்த டிராம் வண்டிகள், கை ரிக்‌ஷாக்கள் இன்றளவும் அங்கு பழமை மாறாமல் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் பயணிப்பது மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும்.

எப்படி சென்றடைவது?

விமானம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரெயில்: ஹவுரா ரெயில் நிலையம் நகரின் மையத்தில் உள்ளது.

சாலை மார்க்கம்: கொல்கத்தா, பெரும்பாலான இந்திய நகரங்களுடன் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அதனால் சுலபமாக சென்றடையலாம்.

வயநாடு:

அக்டோபர் மாதத்தில் தென் இந்தியாவில் பயணிக்க சிறந்த இடங்களில் ஒன்று வயநாடு. தேயிலை தோட்டங்களின் தாயகமாக விளங்கும் இது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு எல்லா மாதமும் இதமான காலநிலை நிலவும். அக்டோபர் மாதத்தில் மேலும் குளிர்ச்சியான சூழலை உணர முடியும். கண்களுக்கு விருந்தளிக்கும் பல இடங்களை பார்வையிடலாம். இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் இது.

எப்படி சென்றடைவது?

விமானம்: கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையம். இது வயநாடு நகரத்தில் இந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரெயில்: அருகிலுள்ள ரெயில் நிலையம் கோழிக்கோடு.

ஹம்பி:

ஒரு காலத்தில் உலகின் பணக்கார மற்றும் செழிப்பான நகரமாக இருந்தது, ஹம்பி. கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் பிரமாண்ட கட்டமைப்புகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். இத்தனைக்கும் பல கட்டுமானங்கள் இடிபாடுகளில் சிக்கி சிதைந்துவிட்டன. ஆனாலும் பண்டைய கட்டிட கலையை பறைசாற்றும் விதத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. இது அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

எப்படி சென்றடைவது?

விமானம்: அருகிலுள்ள விமான நிலையம் ஹூப்ளி. அது 143 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரெயில்: ஹம்பிக்கு அருகாமையில் ஹோஸ்பேட் ெரயில் நிலையம் உள்ளது. இது 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அருகில் உள்ள நகரங்கள்: பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கோவா. இதில் கோவா, 300 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய நகரம்.

கவுகாத்தி:

அசாம் செல்ல உகந்த நேரம் அக்டோபர் மாதம். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக ஐந்து டிகிரி செல்சியஸ் வரையே நிலவும். இந்த மாதத்தில் வானிலை நன்றாக இருக்கும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே பிஹூ கொண்டாட்டம் நடைபெறும். அது பொங்கல் பண்டிகை போல் கொண்டாட்ட நிகழ்வாக அரங்கேறும். வயல்வெளிகளில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தீபம் ஏற்றி வைத்து இயற்கைக்கு நன்றி தெரிவிப்பார்கள். பிஹூ கொண்டாட்டங்களில் பங்கேற்பது வாழ்நாளில் சிறப்பான தருணமாக அமையும்.

எப்படி சென்றடைவது:

விமானம்: கவுகாத்தி சர்வதேச விமான நிலையம்.

ரெயில்: கவுகாத்தி நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் பயணிகள் ரெயில்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

சாலை மார்க்கம்: தேசிய நெடுஞ்சாலை எண் 37 கவுகாத்தியை அனைத்து முக்கிய நகரங்களுடனும் இணைக்கிறது.

ஷில்லாங்:

அமைதியான சூழ்நிலையும், இயற்கை அழகு நிறைந்த அம்சங்களும் கொண்ட அழகான நகரம். ஷில்லாங்கைச் சுற்றிப் பார்க்க அக்டோபர் சிறந்த மாதமாகும். ஏனெனில் அந்த சமயத்தில் அதிக குளிரோ, அதிக வெப்ப நிலையோ நிலவாது. மேகாலயாவின் தலைநகராக இருப்பதால் தங்கும் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக உள்ளன.

எப்படி சென்றடைவது?

விமானம்: கவுகாத்தி விமான நிலையம், 125 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரெயில்: கவுகாத்தி ெரயில் நிலையம் சுமார் 135 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஜெய்ப்பூர்:

அரச நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் நகரம் அரண்மனைகள், பிரமாண்ட கட்டமைப்பு களுக்கு புகழ் பெற்றது. இந்த நகரத்தின் நம்பமுடியாத மகிமையை நேரில் பார்வையிடும்போது உணர்ந்து கொள்ளலாம். அக்டோபரில் பயணிக்க இது சரியான இடமாகும். ஏனெனில் ஈரப் பதம் வெளியேறி, அழகான தட்பவெப்ப நிலை நிலவும்.

எப்படி சென்றடைவது:

விமானம்: சங்கனேர் விமான நிலையம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரெயில்: காந்திநகர், துர்காபுரா மற்றும் ஜெய்ப்பூர் ரெயில் நிலையங்கள்.

சாலை மார்க்கம்: என்.எச். 8, என்.எச். 11, என்.எச். 12 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் நாட்டின் பல பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மைசூரு:

அக்டோபர் மாதத்தில் பார்க்க வேண்டிய இடங்களுள் மைசூரும் முக்கியமானது. மைசூரு அரண்மனை மட்டுமின்றி கிருஷ்ணராஜ சாகர் அணையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பிருந்தாவன் தோட்டம் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைத்துவிடும். அக்டோபர் மாதத்தில் நிலவும் காலநிலையின்போது சுற்றிப்பார்ப்பது மனதை வசீகரித்துவிடும்.

எப்படி சென்றடைவது?

மைசூருவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

ரெயில்: மைசூரு ரெயில் நிலையம்.

சிம்லா:

அக்டோபரில் பனிப்பொழிவு இருக்காது. குளிர்கால சூழல் நிலவினாலும் சிம்லா செல்வதற்கு ஏற்ற மாதங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில் துர்கா பூஜையை கண்டுகளிக்கலாம். இதமான குளிர்ச்சி சூழலில் அனைத்து இடங் களையும் பார்வையிட்டு ரசிக்கலாம்.

எப்படி சென்றடைவது?

விமானம்: சிம்லா விமான நிலையம், 23 கி.மீ தொலைவில் உள்ளது.

ரெயில்: சிம்லா மற்றும் கல்கா இடையே இயக்கப்படும் ரெயிலில் பயணிப்பதன் மூலம் இயற்கை அழகை முழுமையாக ரசிக்கலாம்.


Next Story