கால்பந்து போட்டியை ரசிக்க 7 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்


கால்பந்து போட்டியை ரசிக்க 7 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்
x

பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்து இரு இளைஞர்கள் கத்தார் சென்றடைந்திருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியை நேரடியாக காண்பதற்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் கால்பந்து ரசிகர்கள் அணி திரண்டு கொண்டிருக்கிறார்கள். பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்து இரு இளைஞர்கள் கத்தார் சென்றடைந்திருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து கேபிரியல் மார்ட்டின் மற்றும் மெஹ்டி பாலமிஸ்ஸா ஆகிய இரு இளைஞர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். சைக்கிளில் சென்று உலக கோப்பை கால்பந்து போட்டியை காண வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்தாலும் தங்கள் பயணத்தை சாகச சுற்றுலாவாக மாற்றி அமைத்துவிட்டார்கள்.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது போலவே தங்கள் பயண திட்டத்தை வகுத்திருக்கிறார்கள். மேலும் தங்கள் பயண அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் முழுமையாக ஆவணப்படுத்தியும் இருக்கிறார்கள். தாங்கள் ரசித்து பார்வையிட்ட இடங்கள், அங்கு சந்தித்த நபர்கள், அங்குள்ள உணவு வகைகள், அவற்றுள் தங்களுக்கு பிடித்தமானவை எது? என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் அதில் பகிர்ந்துள்ளனர்.

பிரான்சில் இருந்து தொடங்கிய இவர்களது சைக்கிள் பயணம் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவோக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்வேகியா, துருக்கி, இஸ்ரேல், ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வழியாக இறுதிப் போட்டி நடைபெறும் கத்தாரின் லூசைல் கால்பந்து மைதானத்தை சென்றடைந்திருக்கிறது.

இந்த நாடுகளை கடப்பதற்கு சுமார் மூன்று மாத காலங்களை சைக்கிள் பயணத்திலேயே செலவிட்டிருக்கிறார்கள். பாலைவன தேசங்கள், பனிச்சரிவு தேசங்கள் என மாறுபட்ட கால நிலைகளை சமாளித்திருக்கிறார்கள். ஹங்கேரி நாட்டில் வெள்ள பாதிப்பில் சிக்கியவர்கள், சவுதி அரேபியாவில் அனல் பறக்கும் வெப்பமான சூழலை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவை நெருங்கியபோது சைக்கிள் பழுதாகி இருக்கிறது. அதனை பழுது பார்க்க 15 மணி நேரம் பயணிக்க வேண்டி இருந்திருக்கிறது. இதுபோலவே பயணத்தின் நடுவே பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் பயணம் உற்சாகமாக அமைந்ததாகவே சொல்கிறார்கள்.

3 மாதத்திற்கு பிறகு பயணத்தை நிறைவு செய்தவர்களுக்கு, கத்தாரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சைக்கிள் ஜோடிக்கு பிரான்ஸ் கால்பந்து அணி பங்கேற்கும் போட்டிகளை காண்பதற்கு இலவச டிக்கெட்டுகளும், அந்நாட்டு வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியும் வழங்கப்பட்டுள்ளது.


Next Story