87 வயதில் இரண்டாவது முதுகலை பட்டம்


87 வயதில் இரண்டாவது முதுகலை பட்டம்
x

87 வயதாகும் வரதலட்சுமி இரண்டாவது முதுகலை பட்டம் பெற்று அசத்தி இருக்கிறார்.

கல்வி கற்பதற்கு வயது தடையில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், வயதானவர்கள் பலரும் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு வயதில் தடைப்பட்ட படிப்பை பூர்த்தி செய்து அகம் மகிழ்கிறார்கள். அதிகபட்சம் முதுகலை பட்டம் வரை பெறுவார்கள். ஆனால் 87 வயதாகும் வரதலட்சுமி இரண்டாவது முதுகலை பட்டம் பெற்று அசத்தி இருக்கிறார்.

கனடாவில் இத்தகைய முதுகலை பட்டம் பெற்ற மூத்த பெண்மணிகளில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். முதுமை பருவத்தை எட்டிய, படிக்காதவர்களும் கல்வி பயில்வதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இலங்கை இவரது பூர்வீகம். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார். அதன் பிறகு இலங்கை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ கல்வியியல் படிப்பை முடித்திருக்கிறார்.

50 வயதை கடந்த பிறகு லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக் கல்லூரியில் முதுகலைப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். பலரும் ஓய்வு எடுக்கும் அந்த பருவத்தில் இவருக்கு கல்வி கற்கும் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கிறது. 2000-ம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்திருக்கிறார். அங்கு முதியோர்கள் படிப்பை தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதை அறிந்திருக்கிறார். அது படிப்பை தொடரும் ஆவலை அதிகப்படுத்தவே, அங்குள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலை படிப்பில் சேர்ந்திருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். எனினும் படிப்பை கைவிடாமல் முயற்சித்து, முதுகலை படிப்பை நிறைவு செய்துவிட்டார். இதன் மூலம் கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற மூத்த பெண்மணி என்ற பெருமையை பெற்றுவிட்டார்.

87 வயதிலும் படிப்பை தொடர்ந்ததை பாராட்டி, கனடாவின் ஆன்டாரியோ சட்டமன்றத்தில் இவருக்கு பாராட்டு விழா நடந்தது. நாடு, கண்டங்களை கடந்து படிப்பை தொடர்ந்ததை பாராட்டி, கவுரவிக்கப்பட்டார். கனடாவில் வசிக்கும் பெண்கள் அனைவரும் முதுகலை பட்டம் பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறுகிறார்.


Next Story