என்னை விட 3 வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள்- கமல்ஹாசன் முன்னாள் மனைவி
என்னை விட மூன்று வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் என கமல்ஹாசன் முன்னாள் மனைவி வேதனையுடன் கூறி உள்ளார்.
மும்பை
நடிகை சரிகா சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். குறிப்பாக இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். சிறந்த நடிகைக்காக ஒருமுறை தேசிய விருது வென்ற இவர், ஹே ராம் படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதை வென்றார்.
கமலை திருமணம் செய்துகொண்ட பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சரிகா, லாக்டவுன் சமயத்தில் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டதால் சீரியலில் நடிக்க சென்றதாக கூறியுள்ளார். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து தான் தனது அன்றாட செலவுகளை பார்த்து வருவதாக சரிகா கூறியுள்ளார். 2 மகள்களும் நடிகையாக இருக்கும்போது, பணமின்றி கஷ்டப்படுவதாக நடிகை சரிகா கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை
நடிகை சரிகா 'மாடர்ன் லவ் மும்பை' என்ற வெப் சீரிஸுடன் மீண்டும் நடிப்புக்கு திரும்ப உள்ளார்.அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா இயக்கிய, 'மாடர்ன் லவ்: மும்பை' என்ற தொகுப்பில், 'மை பியூட்டிபுல் ரிங்கில்ஸ்' என்ற குறும்படத்தில் சரிகா நடித்துள்ளார்,
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்புக்குத் திரும்பிய சரிகா, கொரோனா தொற்று ஊரடங்கின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூறி உள்ளார்.
இதுகுறித்து சரிகா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
எனக்கு வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம் என்று தோன்றியது. தினமும் காலையில் தூங்கி எழுகிறோம். நாம் நினைத்த வேலை எதுவும் நடப்பதில்லை. மீண்டும் இரவு தூங்குவோம். எனவே இந்த ஒரே மாதிரியான வாழ்க்கை சுழற்சியில் இருந்து ஒரு ஆண்டு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்.
வித்தியாசமாக ஏதாவது முயற்சிசெய்யலாம் என யோசித்தேன். ஆனால் ஒரு ஆண்டு ஓய்வு என நான் நினைத்தது 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனா வந்தது. ஊரடங்கும் வந்தது .கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்து கஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மேடை நாடகங்களில் நடித்தேன். அதில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய்தான் கிடைத்தது. எனவே மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன்’’ என கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
60 வயதுகளில் உள்ள நடிகைகளுக்கு எப்போதாவதுதான் முக்கிய கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. அவர்கள் மீது ‘அம்மா வேடங்கள்’ திணிக்கப்படுகின்றன. இது நீண்ட காலமாக நடக்கிறது.சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க இது ஒரு முக்கிய காரணம்.
“நான் மீண்டும் நடிக்க வந்தபோது, எனக்கு வந்த முதல் 3-4 படங்கள் என்னை விட மூன்று வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இப்போது ஓடிடி வந்து விட்டது. நிதி ஆபத்து இல்லாத இடத்தில், மக்கள் வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்கத் தயாராக உள்ளனர்.நம்மிடம் சிறந்த கதை ஸ்கிரிப்டுகள் உள்ளன, மேலும் நமது நாட்டில் ஓடிடி க்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர்.நீங்கள் எல்லாவற்றையும் அங்கேகாணலாம். நாம் இன்னும் நேர்மையாக இருக்க முடியும் மற்றும் உண்மையான கதைகளை வெளியே கொண்டு வர முடியும்.
நடிகர்களாக, நீங்கள் அதிக வேலை செய்ய விரும்புகிறீர்கள், வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள், ஆனால் நீங்கள் இயக்குநர்களையே முழுமையாகச் சார்ந்திருக்கிறீர்கள். எனக்கு நல்ல வேடம் கிடைக்கும்போது, அதற்கான வாய்ப்பை நான் தவறவிட்டதில்லை.
ஒரு நல்ல படம் வந்தால் நடிப்பேன். நாளை யாராவது எனக்கு பழங்கள் விற்கும் பாத்திரம் கொடுத்தால், அது நல்ல பாத்திரமாக இருந்தால், அதையும் செய்வேன்.நல்ல இயக்குனர்களுடன் நல்ல ஸ்கிரிப்ட்களை உருவாக்க ஆசைப்படுகிறேன், ஏனெனில் அதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என கூறினார்.
Related Tags :
Next Story