சேவை குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு


சேவை குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க  நீதிமன்றம் உத்தரவு
x

Court orders compensation of Rs 1 lakh to customer for service defect

பெரம்பலூர்

கிரெடிட் கார்டு

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராஜா ரவிதங்கம். இவரது மனைவி மித்ரா. இவர் பெரம்பலூரில் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் செயலாளராக உள்ளார். இவர் பெரம்பலூரில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் மூலம் கிரெடிட் கார்டு பெற்றிருந்தார். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். கிரெடிட் கார்டு பயன்படுத்தியதற்காக சரியான முறையில் உரிய நேரத்தில் பணம் செலுத்தி, பண இருப்பு வைத்துக்கொண்டு வங்கி கணக்கினை பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 17.10.2017 அன்று மித்ராவின் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டிற்கு ரூ.47 ஆயிரத்து 757-க்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களது கிரெடிட் கார்டை தடை செய்து புதிய கிரெடிட் கார்டு தருகிறோம் என்று வங்கி கிளை மேலாளர் கூறியுள்ளார்.

சேவை குறைபாடு

அதற்கு மித்ரா, தான் வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்பதற்காக தனது பாஸ்போர்ட் நகல் உள்ளிட்ட ஆவணங்களை வங்கி நிர்வாகத்திற்கு அளித்துள்ளார். வங்கி நிர்வாகம் நடத்திய விசாரணையில் போலியாக வெளிநாட்டு பண பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. பின்னர் இந்த பணத்தை வங்கியே வாடிக்கையாளர் மித்ராவின் வங்கி கணக்கில் வரவு வைத்துவிட்டது. பின்னர் மித்ராவிற்கு வங்கி மூலம் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கப்பட்டது. இதில் காலதாமதமாக பணம் செலுத்தியது, அதற்கான வட்டி, ஜி.எஸ்.டி. என மொத்தம் ரூ.16 ஆயிரத்து 174-ஐ தாங்கள் செலுத்தவேண்டும் என தெரிவித்தது. அதற்கு மித்ரா, வங்கி நிர்வாகம் செய்த தவறுக்கு நான் ஏன் பணம் கட்டவேண்டும் என பதில் அறிக்கை அளித்துள்ளார்.ஆனால் அதனை ஏற்காமல் வங்கி மேலாளர் வங்கி மூலம் விடுக்கப்பட்ட நோட்டீசில் கூறியுள்ளபடி பணத்தை தாங்கள் செலுத்தவேண்டும். இல்லையென்றால் நீங்கள் எந்த வங்கியிலும் கடன் பெறமுடியாமல் தடுத்து விடுவோம் என கூறி மிரட்டியதோடு, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதை நிறுத்தம் செய்துவிட்டனர்.

இழப்பீடு வழங்க உத்தரவு

ஆனால் மித்ரா பெற்ற கார் கடனுக்கான பணத்தை மட்டும் இ.எம்.ஐ. தவணையாக வங்கி எடுத்துவந்தது. மேலும் மற்ற வங்கிகளிடம் கடன் பெறமுடியாதவாறு கிரெடிட் ஸ்கோர் செய்து அறிக்கை அனுப்பி நிறுத்தம் செய்துவிட்டனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மித்ரா வங்கி சேவை குறைபாடு புரிந்த வங்கி கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து இழப்பீடாக ரூ.10 லட்சம் பெற்றுத்தர கோரி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகவதி, முத்துக்குமரன் ஆகியோர் சேவை குறைபாடு புரிந்த தனியார் வங்கி கிளை மேலாளர் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் மித்ராவிற்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்


Next Story