நாமக்கல் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடிக்கு விற்பனை


நாமக்கல் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடிக்கு விற்பனை
x
தினத்தந்தி 14 March 2023 1:00 AM IST (Updated: 14 March 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன என கலெக்டர் கூறினார்.

புத்தக திருவிழா

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாடு அரசு சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தக திருவிழா நல்லிபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (வடக்கு) கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி இந்த மாதம் 12-ந் தேதி வரை நடைபெற்றது. இப்புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, பாட்டு போட்டி, கவிதை போட்டி, மாறுவேட போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இதையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி சிறார் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

ரூ.1 கோடிக்கு விற்பனை

இதில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை சுமார் 26 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். மேலும் தினசரி 15 ஆயிரம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இந்த புத்தக திருவிழாவில் சுமார் ரூ.1 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்று உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பேராதரவு நல்கிய பொதுமக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.


Next Story