299 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்
பரமேஸ்வரமங்கலத்தில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 299 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
நலத்திட்ட உதவி
அரக்கோணம் தாலுகா பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு 119 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 299 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 23 லட்சத்து 7 ஆயிரத்து 570 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்
நாம் அனைவரும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சுற்றுப்புறத்தினை அழித்து விட்டோம். இனிவரும் காலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து துணி கைபைகளை பயன்படுத்தி நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு சுற்றுப்புறத்தினை நல்ல முறையில் விட்டுச் செல்வோம். கடந்த ஆண்டுகளில் நல்ல மழை பெய்ததன் காரணமாக விவசாயத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு சாராசரியைக் காட்டிலும் குறைவாக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆகவே நாம் முடிந்த அளவிற்கு விவசாயத்திற்கு சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி நீரினை சேமிக்க வேண்டும்.
தற்பொழுது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்படுவதால் குழந்தைகளை குளம், குட்டைகள், ஏரிகளுக்கு செல்வதை அனுமதிக்கக் கூடாது. வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்து செயல்படுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சி
முகாமில் அக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நீரில் மூழ்கியவைரை எவ்வாறு மீட்டு, முதலுதவி செய்வது என்பது குறித்த மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை, மாவட்ட சமூக நலத்துறை, கால்நடைத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறைகள் ஆகியவற்றின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார். தொடர்ந்து அருகிலப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன் வாடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முக சுந்தரம், அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவர் நிர்மலா சவுந்தர், ஒன்றியக் குழு உறுப்பினர் வினோத் குமார், துணை கலெக்டர்கள் முரளி, தாரகேஸ்வரி, மணிமேகலை, சத்தியபிரசாத், வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் ஆனந்தன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன், பேரிடர் மீட்பு படை கமாண்டர் மணிகண்டன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கவிதா, உஷாராணி, நந்தகுமார், வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.