வேன் உரிமையாளருக்கு ரூ.1¾ லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்; காப்பீட்டு நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
வேன் உரிமையாளருக்கு ரூ.1¾ லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேன் கடத்தல்
பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு ஜமாலிநகர், மேற்கு தனிசாலை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்(வயது 46). மெக்கானிக்கான இவர் திருச்சி வரகனேரியில் சென்னை-திருச்சி புறவழிச்சாலையில் உள்ள இலகுரக வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கடந்த 30.3.2017 அன்று ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 224 செலுத்தி ஒரு வேனை வாங்கினார். இதற்காக திருச்சி தில்லைநகர் சாலை ரோடு பகுதியில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்சு நிறுவனத்தில் ரூ.11 ஆயிரத்து 376-க்கு சந்தா செலுத்தி காப்பீடு பெற்றிருந்தார்.
அந்த வேன் கடந்த 16.5.2017 அன்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஷாஜகான் 6.11.2017 அன்று தனது வாகனம் பழுது பார்க்கும் பட்டறை அருகே, அந்த வேனை நிறுத்தினார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அந்த வேனை காணவில்லை. யாரோ அந்த வேனை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஷாஜகான், மங்களமேடு போலீசில் புகார் செய்தார்.
காப்பீடு வழங்காமல்...
இது குறித்து போலீசார் 10.11.2017 அன்று வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் திருட்டு போன வேனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி மங்களமேடு போலீசார், அந்த வேனை காப்பீடு செய்திருந்த நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் ஷாஜகான், காப்பீட்டு நிறுவனத்தை அணுகி வேன் காணாமல் போனதற்கான வழக்குப்பதிவு அறிக்கை, போலீசார் அளித்த தடையின்மை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, காப்பீட்டு தொகையை வழங்கிட கேட்டுக்கொண்டார். ஆனால் அவருக்கு காப்பீட்டு தொகை வழங்காமல் காப்பீட்டு நிறுவனம் அலைக்கழித்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷாஜகான், காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளர் மீது வக்கீல் இல.மானேக்சா மூலம், காப்பீட்டு நிறுவனத்தின் திருச்சி மேலாளர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினர்.
நிவாரண தொகை
இதில் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைபாடு காரணமாகவும், நியூ இந்தியா அஷ்யூரன்சு காப்பீட்டு நிறுவனத்தின் திருச்சி மேலாளர் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண தொகையை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியிருந்தனர்.