லாரிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
லாரிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து கற்கள் உள்ளிட்டவை லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அதிக பாரம் ஏற்றி செல்லும்போது சாலைகள் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கிணத்துக்கடவு பழைய சோதனை சாவடி அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கோபிலதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் லாரிகள் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலக தேர்வு நிலை உதவியாளர் அய்யப்பன், உதவி புவியியலாளர் அஸ்வினி ஆகியோர் கிணத்துக்கடவு-சிங்கையன் புதூர் ரோட்டில் உள்ள கல்லுக்குழி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அதன் டிரைவர் அதிகாரிகள் நிற்பதை பார்த்தவுடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். அதிகாரிகள் லாரியில் சோதனையிட்டபோது அனுமதியின்றி கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.