ரெயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் - 9 பெண்கள் உள்பட 10 பேர் கைது
கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை-சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை மற்றும் நெல்லூர் நோக்கி செல்லும் மின்சார ரெயில்களில் தொடர்ந்து ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலானாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சதிஷ் தலைமையில் தனிப்படை போலீசார், நேற்று கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரெயிலில் அவர்கள் சோதனை செய்தபோது ரெயிலில் ஆந்திராவிற்கு சிறிய சிறிய மூட்டைகளில் கடத்த முயன்ற மொத்தம் சுமார் 1 டன் எடை கொண்ட ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலானாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் ஆந்திராவிற்கு ரேசன் அரிசியை கடத்த முயன்றதாக கவுரி (வயது 65), புஷ்பா (48), கோவிந்தம்மா (75), மற்றொரு புஷ்பா (65), தேசம்மா (55), சுந்தரி (50), லட்சுமி (55), மஸ்தானம்மா (70), மற்றொரு லட்சுமி (50) ஆகிய 9 பெண்கள் மற்றும். செல்வராஜ் (66) உள்பட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.