விஷ சாராயம் குடித்து பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்


விஷ சாராயம் குடித்து பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்
x

விஷ சாராயம் குடித்து பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினா்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கான காசோலையை நேற்று 13 பேரின் குடும்பங்களுக்கு நேரில் சென்று அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர். மேலும் இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த துயரச் சம்பவத்தை அறிந்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், இறந்தவர்களின் குடும்பத்தை காத்திடும் வகையில் ரூ.10 லட்சமும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் விஷ சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அவர்களது வீட்டுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசை குறைகூறும் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஒரே நாளில் மதுவை ஒழிப்பது சாத்தியமில்லை என கடந்த 2016-ம் ஆண்டு கூறினார். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்-அமைச்சர் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று அறிவித்தார். அப்படியொரு நிகழ்வு நடைபெறவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் 3 பேரும், காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தி கிராமத்தில் 2 பேரும், கடலூர் மாவட்டம் ஆலம்பாக்கத்தில் ஒருவரும் விஷ சாராயம் குடித்து இறந்துள்ளனர்.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனே போதை ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்ற இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டாலும் கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story