தூங்கிய மருத்துவரை கட்டி போட்டு கத்தியால் குத்தி 100 சவரன் நகை கொள்ளை - பழனியில் அதிர்ச்சி சம்பவம்


தூங்கிய மருத்துவரை கட்டி போட்டு கத்தியால் குத்தி 100 சவரன் நகை கொள்ளை - பழனியில் அதிர்ச்சி சம்பவம்
x

பழனியில் தூங்கிய மருத்துவரை கட்டி போட்டு கத்தியால் தாக்கி 100 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பழனி,

பழனி அண்ணாநகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரேவதி (50) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இதன் காரணமாக அவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளைப் பார்க்க சென்னைக்கு சென்று விட்டார்.

உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் பணியை முடித்து விட்டு வீட்டில் தூங்கச் சென்றார். இன்று அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த உதயகுமார் சத்தம் போட முயன்ற போது அவரை சேரில் வைத்து கட்டிப் போட்டனர். அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு கத்தியால் குத்தி பீரோ சாவியை பறித்தனர்.

பின்னர் அவரை கட்டிப் போட்டு வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டனர். மற்ற அறைகளில் இருந்த பீரோக்களையும் திறந்து பார்த்த போது அதில் பணம், நகை எதுவும் இல்லாததால் விட்டு விட்டனர். பின்னர் தங்களை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி விட்டு தப்பி விட்டனர்.

முன்னதாக கத்தியால் குத்தியதில் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதால் கயிற்றை லேசாக அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பிறகு படுகாயங்களுடன் உதயகுமார் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் உதயகுமார் இது குறித்து பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டு வரப்பட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

மேலும் காயமடைந்த உதயகுமாரை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் நடந்த போது அவரது வீட்டில் பணியாட்கள் யாரேனும் இருந்தார்களா? என்றும் அவர்கள் இந்த கொள்ளையில் தொடர்பில் உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் தொடரும் இது போன்ற முகமூடி கொள்ளையர் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story