100 யூனிட் இலவச மின்சாரத்தை தவிர்க்கலாம்: தமிழ்நாடு அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தல்


100 யூனிட் இலவச மின்சாரத்தை தவிர்க்கலாம்: தமிழ்நாடு அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தல்
x

பொருளாதார ரீதியாக உயர்ந்திருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தவிர்க்கலாம் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பட்ஜெட்டில் தமிழ்நாட்டு நிதிநிதிநிலைமையை மிகவும் பாதிக்கக்கூடிய தவிர்க்கப்பட வேண்டிய இலவசங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசுக்கு வரி செலுத்தும், பொருளாதார ரீதியாக உயர்ந்திருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தவிர்க்கலாம்.

எளிய மக்களை தவிர்த்து, வருவாயில் தன்னிறைவு அடைந்த ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள், உட்பட 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசை தவிர்க்கலாம். நகர அரசு பஸ்களில் மகளிருக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணம் வரைமுறையின்றி அனைவருக்கும் வழங்கப்படுவது தவிர்க்கலாம்.

அதேநேரத்தில், பயனுள்ள வழங்கக்கூடிய இலவசங்களான தரமான கல்வி, தரமான மருத்துவம், தரமான குடிநீர்-தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை, சிறு, குறு விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், இலவச மின்சாரம், இலவச உரம், விதை வழங்கல் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, நமது தமிழ்நாட்டு அரசின் கடன் சுமையை குறைப்பதற்கு மக்களாகிய நாம் அனைவரும் நாமாக முன்வந்து, இலவசங்களை தவிர்க்கும் முயற்சிக்கு ஆதரவாக ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story