உத்திரமேரூர் அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்ட 103 பேர் கைது
உத்திரமேரூர் அருகே கோரிக்ககைகளை நிறைவேற்றக் கோரி தொழிற்சாலையை முற்றுகையிட்ட 103 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட 19 தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்திடவும், தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்திட வலியுறுத்தியும், ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையினுல் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் முத்துகுமார் தலைமையிலான சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிற்சாலையை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்த காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் முத்துகுமார், மாதர் சங்க மாவட்ட தலைவர் ரமணி, மலை வாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட 103 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.