சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க கலங்கரை விளக்கம்-கிண்டி இடையே 11 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் - நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது


சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க கலங்கரை விளக்கம்-கிண்டி இடையே 11 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் - நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது
x

கலங்கரை விளக்கத்தில் இருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயரமான மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் சென்னை மாநகரில் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. இதற்காக தற்போது ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த மேம்பாலம் கலங்கரை விளக்கத்தில் இருந்து சந்தோம் சந்திப்பு, மயிலாப்பூர் கச்சேரி சாலை, கிரீன்வேஸ் சாலை, டாக்டர் முத்துலெட்சுமி பூங்கா சந்திப்பு, அடையாறு சந்திப்பு, மத்திய கைலாஷ் சந்திப்பு, கோட்டூர்புரம் சந்திப்பு, சின்னமலை, செல்லம்மாள் கல்லூரி வழியாக கிண்டியை சென்றடைகிறது. கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிண்டிக்கு 30 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 9 மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேம்பாலங்கள் மற்றும் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை 4 வழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு முன்பாக தற்போது சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

இதுதவிர ராஜீவ்காந்தி சாலையில் உள்ள இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் 'யு' வடிவிலான 2 மேம்பாலங்கள் கட்டும் பணி தற்போது ரூ.108.13 கோடியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மத்திய கைலாஷ் சந்திப்பில் உள்ள உத்தேச மேம்பாலம் கட்டுமானத்துக்கு முந்தைய நிலையில் உள்ளது.

இதுதவிர, காட்டுப்பாக்கம்- குன்றத்தூர்-குமணன்சாவடி சந்திப்பில் ரூ.485 கோடி செலவில் தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை பஸ் நிலையம் வரை 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

அத்துடன், ரூ.322 கோடி முதலீடு மற்றும் ரூ.100 கோடி செலவில் பாடி மேம்பாலத்தின் இருபுறமும் அகலப்படுத்துதல், தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைப்பதன் மூலம் அண்ணாசாலையில் பயண நேரத்தை 30 நிமிடங்கள் குறைக்கும். இதனால் விமான நிலையத்துக்கான இணைப்பு மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story