கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல்-விற்பனை: சென்னையில் ஒரே வாரத்தில் 12 பேர் கைது
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரத்தில் நடத்திய அதிரடி சோதனை வேட்டையில் கஞ்சா உள்பட போதைப் பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது ஈஷா(26), சைரா அகமதுகான் (30), மதுரவாயலை சேர்ந்த கோகுல்ராஜ் (22) உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 8½ கிலோ கஞ்சா, 15 கிராம் மெத்தம்பெட்டமைன், 1,200 உடல் வலி நிவாரண மாத்திரைகளும், செல்போன், ரூ.75 ஆயிரத்து 760 பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சிறப்பு சோதனை தொடரும் என்றும், கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.