சிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது


சிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
x

சிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

சிறப்பு மருத்துவ முகாம்கள்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டு வருவது அதிகரித்து வந்தது. மாவட்டங்களில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் ஏற்படும் பகுதிகள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

முகாமில் குழந்தைகள், மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு டாக்டர்கள் குழுவினரினால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகாமில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் அறிகுறிகள் 3 தினங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தேவைப்படும் நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தொடர் கண்காணிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த முகாம்களில் 20 ஆயிரத்து 971 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 72 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு முறையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படும் 4 பேர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாம்களில் 3,539 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 52 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்திட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருந்து மாத்திரைகளும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அவசரகால உதவிக்கு...

மேலும், இக்காய்ச்சல் பரவுவதை விரைந்து கட்டுப்படுத்த பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரை காய்ச்சி குடித்திடவும், உபயோகம் அற்ற பொருட்களை வீட்டைச் சுற்றி உள்ளதை அப்புறப்படுத்தவும், தேவையான பொருட்களை தண்ணீர் புகாமல் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் பட்சத்தில் சுயமாக சிகிச்சை மேற்கொள்ளாமல் டாக்டரின் ஆலோசனையை பெற்று முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் தொடர்பான ஆலோசனை மற்றும் அவசரகால உதவிக்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story