1,280 டன் உரம் தஞ்சைக்கு வந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குரெயிலில் 1,280 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.
தஞ்சாவூர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குரெயிலில் 1,280 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.
மேட்டூர் அணை
டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை, மேட்டூர் அணையில் திருப்திகரமான நீர் இருப்பு தரும் நம்பிக்கையால் முன்பட்ட குறுவை சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு 69 டி.எம்.சி.க்கும் அதிகமாகவும், நீர்மட்டம் 103 அடிக்கும் மேலாகவும் உள்ளது.எனவே நடப்பு ஆண்டும் மேட்டூர் அணை உரிய காலமான ஜூன் 12-ந் தேதியோ அல்லது நிலைமையைப் பொருத்து அதற்கு முன்போ திறப்பதற்கான சாதகமான நிலை நிலவுகிறது.நடப்பு ஆண்டு குறுவை பருவத்தில் தஞ்சை மாவட்டத்தில் 70 ஆயிரம் ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஹெக்டேரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 39 ஆயிரம் ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி
இந்தநிலையில், டெல்டா மாவட்டங்களில் சில நாட்களாக கோடையில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் ஹெக்டேரில் முன் பட்ட குறுவை சாகுபடி தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதேபோல, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாற்றங்கால் தயாரிப்பு, நிலத்தை உழுதல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இதற்கு தேவையான உரங்கள் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுவது வழக்கம்.
1,280 டன் உரம்
அதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குரெயிலில் 21 வேகன்களில் 965 டன் யூரியா உரமும், 252 டன் காம்ப்ளக்ஸ் உரமும், 63 டன் சூப்பர் பாஸ்பேட் உரமும் என 1,280 டன் உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த உரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.