வேதாரண்யம் அருகே மினி பஸ் வயலில் கவிழ்ந்து விபத்து - கல்லூரி மாணவர்கள் உட்பட 13 பேர் காயம்
வேதாரண்யம் அருகே மினி பஸ் வயலில் கவிழ்ந்து விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இருந்து கத்தரிப்புலம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த தனியார் மினி பஸ் வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்டு 30-க்கு மேற்பட்ட பயணிகள் கத்தரிப்புலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ் ஓட்டுனர் வளைவில் வேகமாக திரும்பியபோது எதிர்பாராவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வயலில் கவிழ்ந்தது.
பஸ் கவிழ்ந்ததும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் வேதாரண்யம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 10 பேர் மற்றும் பொதுமக்கள் 3 பேர் உட்பட 13 பேர் காயங்களுடன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். இது குறித்து காரியாபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.