1,330 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


1,330 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x

மண்டபம் கடல் பகுதியில் 1,330 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மண்டபம் கடல் பகுதியில் 1,330 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடல் அட்டைகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் பகுதியில் ஒரு மீன்பிடி படகில், அரிய உயிரினங்களில் ஒன்றான கடல் அட்டைகளை பிடித்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் அதிகாரிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் மண்டபம் காந்தி நகர் அருகே விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு கரை நோக்கி வந்த ஒரு நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தபோது அதில், 44 சிறிய மூடைகளில் 740 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடல் அட்டைகளையும், அந்த நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து, அந்த படகில் இருந்த வேதாளையை சேர்ந்த நந்தகுமார் (வயது 19), நவீன் (22) ஆகியோரை கைது செய்தனர்.

1,330 கிலோ பறிமுதல்

இதேபோல் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் ஒரு சிறிய மீன்பிடி படகில் கொண்டுவரப்பட்ட 60 சிறிய மூடைகளில் இருந்த 590 கிலோ கடல் அட்டைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து மண்டபத்தை சேர்ந்த சீனி ரமலான் (28) என்பவரை கைது செய்தனர். மண்டபத்தில் 2 இடங்களில் அடுத்தடுத்து வனத்துறையினர் மொத்தம் 1,330 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடல் அட்டைகள் அனைத்தும் இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். கைதான 3 பேரை ராமேசுவரம் கோர்ட்டில் வனத்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிபதி இளையராஜா உத்தரவின்பேரில் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டதுடன், கடல் அட்டைகளும் அழிக்கப்பட்டன.Next Story