2 பெண்களிடம் 14 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டையில் 2 பெண்களிடம் 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 62). இவர் நேற்று மதியம் பெரியார் நகரில் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடினார்.
இதேபோல அதே சாலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெரியார்நகர் நோக்கி நடந்து வந்த திருவள்ளுவர் நகரை சேர்ந்த மணிமேகலை (51) கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் பறித்து சென்றார். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் 2 பெண்களிடம் 14 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் ஒரே நபர் தான் என்பதும், அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததும் தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் சங்கிலி பறிப்பு திருடன் உருவம் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருக்கோகா்ணத்தில் நேற்று முன்தினம் பெண் ஒருவரிடம் 7 பவுனும், விராலிமலையில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவங்களும் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் தொடர் சங்கிலி பறிப்பால் சங்கிலி பறிப்பு திருடர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் நுழைந்து தங்களது கைவரிசையை காட்ட தொடங்கியதாக கருதப்படுகிறது. மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.