பஸ்சில் தவறவிட்ட 15 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு


பஸ்சில் தவறவிட்ட 15 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
x

அறந்தாங்கியில் பஸ்சில் தவறவிட்ட 15 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

தேவக்கோட்டையை சேர்ந்தவர் டேவிட் அந்தோணிராஜ் (வயது 42). இவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 7-ந் தேதி அறந்தாங்கி பஸ்நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். பின்னர் டேவிட் அந்தோணிராஜ் தான் கொண்டு வந்த ஒரு பையை பஸ்சில் வைத்து விட்டு டீ குடிப்பதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அவர் தவறுதலாக வேறொரு பஸ்சில் ஏறி விட்டார். அவர் பை வைத்திருந்த பஸ் மதுரை சென்றுவிட்டது.

இந்தநிலையில் பஸ்சில் கேட்பாரற்று கிடந்த பையை கண்ட கண்டக்டர் ரவி அந்த பையை திறந்து பார்த்தார். அதில் மடிக்கணினி மற்றும் 15 பவுன் நகை இருந்தது. பின்னர் அந்த பையை அறந்தாங்கி அரசு பணிமனை மேலாளர் குணசேகரனிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த பையில் இருந்த டேவிட் அந்தோணிராஜின் செல்போன் எண் மூலம் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் முன்னிலையில் பஸ்சில் தவறவிட்ட 15 பவுன் நகை, மடிக்கணினி ஆகியவை டேவிட் அந்தோணிராஜிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் நகையை ஒப்படைத்த கண்டக்டர் ரவி, டிரைவரை முத்துகுமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story