வீட்டின் முன்பு கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு


வீட்டின் முன்பு கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2023 10:15 PM GMT (Updated: 4 Oct 2023 10:15 PM GMT)

மூதாட்டியிடம் 15 பவுன் நகையை பறித்துச்சென்ற டிப்-டாப் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்


மூதாட்டியிடம் 15 பவுன் நகையை பறித்துச்சென்ற டிப்-டாப் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு


கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள செந்தில் ஜனதா நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மனைவி கலைவாணி (வயது 65). இவர்கள் உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நேற்று அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டனர்.


இதையடுத்து சரியாக அதிகாலை 3.40 மணிக்கு கலைவாணி வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார். வேலுசாமி நிகழ்ச்சிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.


இந்த நிலையில் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்து திடீரென வெளியே வந்த வாலிபர், கண்ணிமைக்கும் நேரத்தில் கோலம் போட்டுக்கொண்டிருந்த கலைவாணியின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.


கண்காணிப்பு கேமரா


இதனால் அதிர்ச்சியடைந்த கலைவாணி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். உடனே வீட்டில் இருந்த வேலுசாமி மற்றும் குடும்பத்தினர் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.


மேலும் கலைவாணியின் சத்தம்கேட்டு அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.


இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்து மூதாட்டி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.


டிப்-டாப் வாலிபருக்கு வலைவீச்சு


அதில் அதிகாலை 3 மணிக்கு அந்த பகுதியில் டிப்-டாப் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிகிறார். பின்னர் அவர் அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொள்கிறார். அப்போது தான் கலைவாணி கோலம் போட வருகிறார். இதையடுத்து அந்த நபர் கலைவாணியின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்செல்கிறார்.


இந்த காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி, மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற டிப்-டாப் வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் முன்னாள் குற்றவாளிகளின் புகைப்பட பட்டியலை வைத்தும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.



Next Story