கடலுக்கு அடியில் சாக்கு பையில் பதுக்கிய 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
மண்டபம் பகுதியில் கடலுக்கு அடியில் சாக்கு பையில் பதுக்கிய 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர போலீசார் பறிமுதல் செய்து கடலில் விட்டனர்.
பனைக்குளம்,
மண்டபம் பகுதியில் கடலுக்கு அடியில் சாக்கு பையில் பதுக்கிய 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர போலீசார் பறிமுதல் செய்து கடலில் விட்டனர்.
ரோந்து பணி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முனைக்காடு கடல் பகுதியில் நேற்று மண்டபம் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் யாசர்மவுலானா தலைமையில் கடலோர போலீசார் படகு ஒன்றில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வடக்கு கடல் பகுதியில் கயிறு ஒன்றில் கட்டி கடலுக்குள் மிதக்க விடப்பட்டிருந்த 8 சாக்கு பைகளை எடுத்து சோதனை செய்தனர். சோதனை செய்து பார்த்ததில் அந்த சாக்கு பைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பிடித்து அதை கட்டி வெளியே தெரியாமல் இருப்பதற்காக கடலுக்குள் மிதக்க விடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கடலோர போலீசார் அதை மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கடலில் விட்டனர்
வனச்சரகர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் அந்த கடல் அட்டைகளை பார்வையிட்டபோது அவை அனைத்தும் உயிருடன் இருப்பது தெரியவந்தது. கடலோர போலீசாரால் ஒப்படைக்கப்பட்ட அந்த 150 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் ரோந்து படகு ஒன்றில் பிளாஸ்டிக் கேன்களில் வைத்து தென்கடல் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவு அருகே உள்ள நடுக்கடலில் கொண்டு சென்று கடல் அட்டைகளை உயிருடன் விட்டனர்.
கடலில் விடப்பட்ட அந்த கடல் அட்டைகள் நீந்தியபடி சென்றன. கடலோர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக சாக்கு பையில் கட்டி கடலுக்குள் மிதக்க விடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.