எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 1,500 ஆசிரியர்கள்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 1,500 ஆசிரியர்கள்
x

குமரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய பொதுதேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 1,500 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய பொதுதேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 1,500 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

பொதுத்தோ்வு

குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 11 ஆயிரத்து 216 மாணவர்களும், 12 ஆயிரத்து 56 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 272 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதே போல் பிளஸ்-2 தேர்வை 11 ஆயிரத்து 584 மாணவர்களும், 11 ஆயிரத்து 805 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 389 பேர் எழுதினார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11 ஆயிரத்து 697 மாணவர்களும், 11 ஆயிரத்து 587 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 284 பேர் எழுதினர்.

ஒவ்வொரு தேர்வுகள் முடிந்த பிறகும் விடை தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு குழித்துறை, தக்கலை, நாகர்கோவில் மற்றும் திருவட்டார் ஆகிய கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி

இதற்கிடையில் பிளஸ்-2, பிளஸ்-1 எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் 4 மையங்களில் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கான விடைத்தாள் நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான விடைத்தாள்கள் தக்கலை அமலா கான்வென்ட் பள்ளியிலும், மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளியிலும் திருத்தப்படுகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 1,500 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிளஸ்-2, பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.


Next Story